இந்தப் பதிவை நான் எழுதும் நாள் 2012 அக்டோபர் 2,
அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாள். அகிம்சை என்ற ஒரே ஆயுதத்தை கொண்டு இங்கிலாந்திடம்
இருந்து இந்தியாவுக்கு ( பாகிஸ்தான், பங்களாதேஷயும் சேர்த்துதான்) சுதந்திரம்
வாங்கி தந்தவரின் நன்நாள். இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்கள் ஜப்பானிலும்,
ஐரோப்பியாவிலும் செத்து மடிந்த தருணத்தில் அமைதியான முறையில்ஆயுதம் இன்றி
போராடியவர். அப்படிப்பட்ட அந்த மகானுக்கு இன்றுவரை அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்படவில்லை. ஆச்சரியம்தான்..!!! ஆனால் உண்மை.!!!
(தகவல் ஆதாரம் : http://www.nobelprize.org)
இதுவரை ஐந்து முறை 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில் காந்தியின்
பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசியில் கிடைக்கமால் போனதுதான்
மிச்சம். காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில்
வாழ்ந்த மக்கள் 1930 ஆம் ஆண்டு “இந்தியாவின் நண்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் முயற்சியால் 1937 ஆம் ஆண்டு முதல் முறையாக
காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டின் பாராளுமன்ற
உறுப்பினர் Ole Colbjørnsen
என்பவரால் பரிந்துரைக்கப்படுகிறது. மொத்தம் 13 பெயர்கள் காந்தியுடன் சேர்த்து
இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது. நோபல் கமிட்டி Professor
Jacob Worm-Müller என்பவரை காந்தியை பற்றிய விரிவான
அறிக்கை தரும்படி கேட்டுக்கொள்கிறது. அவர்
தன்னுடைய அறிக்கையில் காந்தியின் அகிம்சை மற்றும் அவருடைய கோட்பாடுகளை பாராட்டிய அதே நேரத்தில் கீழ்
கண்ட இரண்டு விஷயங்களை காந்திக்கு பாதகமாக தெரிவிக்கிறார். இது 1937 ஆம் ஆண்டு
எழுதப்பட்ட அறிக்கை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.
1)
காந்தி இந்தியாவிலும், தென் ஆப்ரிக்காவிலும் அநீதிக்கு எதிராக போராடியிருந்தாலும்
அந்த போராட்டம் இந்தியர்களுக்காக மட்டுமே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் அவர் இந்தியர்களுக்காக
போராடிய அதே நேரத்தில் கருப்பின மக்கள் அடிமைகளாகவும் இந்தியர்களைவிட இன்னும்
மோசமான நிலையிலும் இருந்தனர். காந்தி அவர்களுக்காக எந்தவிதமான தீவிர
போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே இவரை ஒரு உலக அளவிலான போராட்ட தலைவராக
கருதமுடியாது, ஒரு தேசிய அளவிலான தலைவராக மட்டுமே கருத முடியும்.
2)
காந்தி அகிம்சை போராட்டத்தை தம் மக்களுக்கு வழி காட்டிய போதிலும் அவருடைய
தொண்டர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சவுரி சாரா என்ற ஊரில் ஒரு காவல்
நிலையத்தை காவல் அதிகாரிகளை உள்ளே வைத்து எரித்து கொன்றனர் (இந்த சம்பவம் காந்தி
திரைப்படத்திலும் காட்டப்படும்).
மேற்
சொன்ன இரண்டு காரணங்களினால் அந்த ஆண்டு காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டு Lord Robert
Cecil என்ற இங்கிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுகிறது. Ole Colbjørnsen மீண்டும் 1938 மற்றும்1939 ஆண்டுகளில் மறுபடியும்
காந்தியின் பெயரை பரிந்துரை செய்கின்றார். ஆனால் அப்போதும் வழங்கப்படவில்லை.
அதன்
பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு மறுபடியும் காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது.
இம்முறை இந்தியாவிலிருந்து தபால் தந்தி மூலம் பாம்பே முதல் மந்திரி கோவிந்த் பல்லாப் பந்த் மற்றும் சபாநாயகர்
மவலாங்கர் நோபல் கமிட்டிக்கு காந்தியின் பெயரை பரிந்துரைக்கின்றனர்.
வழக்கம் போல நோபல் கமிட்டி காந்தியை பற்றிய அறிக்கை
தரும்படி இம்முறை வரலாற்று பேராசிரியர்
Jens Arup Seip என்பவரை கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான்
இந்தியா சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் பிரிந்து பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான
மக்கள் மடிந்தும் அகதிகளாக துரத்தப்பட்டும் துயர சம்பவங்கள் நடந்தேறின. இதை பேராசிரியர் Jens Arup Seip தன் அறிக்கையில் குறிப்பிட்டு காந்தியால் அல்லது காந்தியின் தொண்டர்களால் இதை
தடுக்க இயலாமல் போய்விட்டது என்று குறிப்பிடுகிறார்.
அந்த ஆண்டு இறுதி
பட்டியலுக்கு வந்த 6 பெயர்களில் நோபல் கமிட்டியில் இருந்த அனைவரும் காந்தியின் பெயரை
தேர்வு செய்ய, Martin Tranmæl மற்றும் Birger Braadland என்ற இரண்டு பேரும் நிராகரித்து விட்டனர்.
அவர்கள் சொன்ன காரணம்: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை கலகத்தால் நேர்ந்த உயிர்
இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம், மேலும் இப்போது காந்திக்கு இந்த விருதை கொடுத்தால்
அது இந்தியா-பாகிஸ்தான் உறவை இன்னும் சீர்குலைக்கும். ஆக 1947-லிலும் நோபல் பரிசு
காந்திக்கு நிராகரிக்கப்பட்டு American
Friends Service Committee என்ற தொண்டு நிறுவனத்துக்கு
வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டே 1948-ல் மீண்டும்
காந்தியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது.
இம்முறை காந்தியுடன் சேர்த்து மொத்தமே மூன்று பெயர்கள்தான் உள்ளன. இம்முறையும் பேராசிரியர் Jens Arup Seip காந்தி பற்றிய அறிக்கையை நோபல் கமிட்டியிடம் சமர்பிக்கின்றார். ஒருமனதாக
அனைவரும் காந்தியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்கின்றனர். அதிகார
பூர்வமான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கவுள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது 1948
ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுகின்றார்.நோபல் கமிட்டின் சட்ட விதிகளின் படி இறந்து
போனவருக்கு வழங்க முடியாது. கீழ் கண்ட சட்ட விதிகளின் படி இறந்து போனவருக்கு நோபல்
கமிட்டி வழங்க முடியும்,
1)
இறந்து போனவர் தன் வாரிசை சட்டப்படி உயில்
எழுதி தெரிவித்து இருந்தால் அவர் வாரிசுக்கு வழங்கப்படும்.
2)
இறந்து போனவர் ஏதாவது கட்சியின் அல்லது
நிறுவனத்தின் தலைவராக இருந்தால் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும்.
ஆனால் காந்தி உயிலும் எழுதி
வைக்கவில்லை, எந்த கட்சியோ அல்லது நிறுவனத்தின் தலைவராகவோ அந்த சமயத்தில் இல்லை. இறுதியாக
நோபல் கமிட்டி அந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கவில்லை.
(தகவல் ஆதாரம் : http://www.nobelprize.org)