சுந்தரம் ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை" படிக்கும்போது எனக்கு வயது 35 - யை தாண்டியிருந்தது.ஒரு விதத்தில் அதுவும் நல்லதுதான், இல்லாவிட்டால் அந்தக் கதை புரிந்திருக்காது. அந்தக் கதை புளியமரத்தை பற்றியது அல்ல, அந்த மரத்தின் முன், அதன் மேல், அதன் நிழலில் நடக்கும் நிகழ்வுகளின் பதிவு அல்லது தொகுப்பு எனலாம். படித்து முடிக்கும் போது ஒரு அருமையான நெஞ்சை தொடும் ஈரானிய திரைப்படம் பார்த்த உணர்வு.நினைத்துப் பார்க்கும்போது என் வாழ்கையிலும் புளிய மரம் ஒரு காலக்கட்டம் வரை கூடவே இருந்திருக்கிறது.
சின்ன வயதில் தொளசம்பட்டியில் குடியிருந்த வீட்டின் வாசலில் இரண்டு பெரிய புளிய மரம் இருக்கும். ஒன்று நன்றாக வேர் விட்டு வெகு அருகில் திண்ணையை பேர்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று சற்று தள்ளி இருக்கும். நல்ல வாட்ட சாட்டமான குண்டு மரங்கள்.இரவில் அதன் மேல் மூச்சா அடித்திருக்கிறேன், பகலில் அதே மரத்தின் கீழ் விளையாண்டிருக்கிறேன்.அதன் மேல் ஏறும் மொசுக்கட்டை பூச்சிகளை கொன்று என் வீரத்தை நிலை நாட்டியிருக்கிறேன், மரத்தின் பட்டை என்று தொட்டு, பின் அது உயிருடன் இருக்கும் மரப்பல்லி என்று தெரிந்ததும் பயந்திருக்கிறேன்.
புளிய மரங்களை மே மாதங்களில் பார்க்கக் கூடாது, இலையுதிர்ந்து வெறும் மொட்டை மரமாக பார்க்க பயமாக இருக்கும். ஜூன் மாதத்தில் புதிய இலை துளிர் விட்டு புத்தம் புது இளம் பச்சை நிறத்தில் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.புதிதாக துளிர் விடும் புளிய இலையை சாப்பிடலாம், புளியம் பூ, பிஞ்சு, பழம், பழத்திற்கும் காய்க்கும் இடைப்பட்ட பருவமான துவரு, வருத்த புளியங்கொட்டை இப்படியாக புளிய மரத்தின் அத்தனை product - களையும் பலவிதங்களில் ருசித்திருக்கிறேன்.பக்கத்து வீட்டு மோகனா அக்கா அவசரமா வெறும் உப்பு, சிவப்பு மிளகாய் அத்துடன் பச்சை புளியங்காய் வைத்து அரைத்து செய்யும் புளியந் தொவயலுக்கு ஏங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு மரங்களுமே நன்றாக காய்க்கும். என் கூட படிக்கும் friend-ன் அம்மாதான்
எப்போதும் அந்த மரங்களின் வருட குத்தகை எடுப்பார். நன்றாக புளியம் பழம் வந்தவுடன் ஆட்களை அழைத்து வந்து மரத்தின் மீது ஏறி உலுக்கி உலுக்கி புளியம் பழத்தை பொறுக்கி மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு போவார்கள்.அத்துடன் அந்த வருடத்துக்கு என்னுடைய
புளியம் பழம் snack முடிவுக்கு வரும்.
ஒன்பதாவது படிக்கும் போது சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு குடி போனோம். இந்த வீட்டின் முன்பு இரண்டு அல்ல, கிட்டத்தட்ட ஐம்பது புளிய மரங்கள் இருந்தன. அது ஒரு வாரச் சந்தை நடக்கும் இடம். ஒவ்வொரு ஞாயிறும் அந்த புளிய மரங்களின் அடியில் சந்தை கூடும். ஞாயிறு காலை 6.30 மணிக்கெல்லாம் ஆட்டை உரித்து புளிய மரக் கிளையில் தொங்கவிட்டு வியாபாரம் ஜோராக தொடங்கிவிடும். தக்காளி, வெண்டை,அவரை, கரும்பு, தர்பூசணி, குச்சி கிழங்கு எல்லாம் மதியத்திற்கு மேல்தான் டெம்போ van-ல் வந்து இறங்கும்.இங்கு நிறைய மரங்கள் இருந்ததால் எந்த ஒரு தனிப்பட்ட மரத்தின் மீதும் ஈர்ப்பு வரவில்லை. நாட்கள் நகர்ந்தன, காலேஜ் படிக்க சென்றேன். அங்கும் ஒரு புளியமரம்.
நான் சந்தித்த புளிய மரங்களில் இது முற்றிலும் வேறானது. இதை முதன் முதலில் நான் பார்த்ததே சினிமாவில் காண்பிக்கும் introduction scene போலத்தான் இருந்தது. காலேஜ் முகப்பில் இருந்து பார்த்தால் தெரியாது, உயரமான காலேஜ் building-ன் உள்ளே நுழைந்து பின்பக்கம் வெளியே வரும்போது இறங்க படி இருக்காது, temporary-யாக மண்ணை கொட்டி சரிவாக வைத்திருப்பார்கள். அதில் வேகமாக இறங்கி சடாரென திரும்பினால் இந்த புளியமரம் தெரியும். எங்கள் காலேஜ் desk -ல் எவனோ ஒரு சீனியர்
"மரமே, புளிய மரமே - நீ
என்று கவிதை கிறுக்கியிருந்தான். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, அந்த மரத்தை பார்த்த பின்புதான் புரிந்தது நானும் பிற்காலத்தில்
" எங்கள் புளிய மரத்திற்கு
எப்போதும் வசந்த காலம் - இது
ரோஜாக்கள் பூக்கும் புதுமை மரம் "
என்று புதுக் கவிதை எழுதி படிப்பவர்களை தொல்லை படுத்துவேனென்று. காரணம் அந்த புளிய மரத்தடியில் வண்ண வண்ண உடைகளில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் இருப்பார்கள். சில கொடுத்து வைத்த மகாராஜாக்கள், காலேஜ் பாஷையில் சொன்னால் கடலை மன்னர்கள் நேரம் போவது தெரியாமல் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பார்கள். அந்த புளிய மரத்தடியில் இருந்துதான் பெண்களுக்கான காலேஜ் பஸ் கிளம்பும். பஸ் கிளம்பியவுடன் கடலை மன்னர்கள் சோகமாக ஹாஸ்டலுக்கு திரும்புவார்கள். நானும் அந்த கடலை போடும் க்ரூபில் சேர தீவிரமாக முயற்சித்தேன். நாலு வார்த்தை தொடர்ந்து இங்கிலீஷ் பேச தெரியாததாலும், நல்லதாக ஒரு ஜீன்சும் ஷூவும் இல்லாததாலும், ஹாஸ்டலில் Anti-கடலை க்ரூப்பின் கன்னா பின்னா ஓட்டுதலுக்கு பயந்தும், இன்னும் சில பல காரணங்களினாலும் அந்த முயற்சி படு தோல்வி அடைந்தது. ஆகவே வேறு வழி இல்லாமல் Anti-கடலை க்ரூப்பில் சேர்ந்து கடலை மன்னர்களை கலாய்க்க ஆரம்பித்தேன்.அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது, அந்த Anti-கடலை க்ரூப்பில் இருந்த அனைவரும் கடலை போடும் முயற்சியில் தோல்வியடைந்த அல்லது முயற்சித்தால் கட்டாயம் தோல்வி அடையும் வயித்தெரிச்சல் கோஷ்டி என்பது, இப்படியாக கல்லூரியில் அந்த புளிய மரத்தடியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வயித்தெரிச்சலுடன் வளர்ந்து வந்தேன். காதல் வந்த சில நண்பர்களுக்கு கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி உதவினேன். உதாரண உளறல்:
"புத்தனுக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில் - உன்னால்
எனக்கு காதல் வந்தது புளிய மரத்தடியில்".
கவிதை கொண்டு கொடுத்தவனுக்கு காதல் முறிந்து, ஞானம் பிறந்ததுதான் மிச்சம்.இப்படியாக அந்த ஒரு மரத்தடியில் மகிழ்ச்சி,காதல்,சண்டை,ஏக்கம்,சோகம்,துரோகம் என தமிழ் படத்தில் காண்பிக்கும் அத்தனை உணர்வுகளையும் கண்டேன்.
கல்லூரி விழாக்களுக்கு அந்த மரத்தில் போஸ்டர் தொங்க விடுவோம், ஹோலி பண்டிகையில் கலர் பொடி தூவுவோம், நியூ இயர்க்கு நடு ராத்திரியில், தண்ணி அடித்த வீர மறவர்கள் அந்த மரத்தின் மேலே ஏறி "Happy New Year.." என்று காது செவிடாகும் வரை கத்துவார்கள்.
இறுதியாக காலேஜ் முடியும் போது பிரிவு என்ற உணர்வையும் அந்த மரத்தடியில் அனுபவித்தேன், அந்த அனுபவம் மிகவும் கொடுமையானது. கடைசியாக கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு போகும்போது அந்த மரத்தை பார்த்ததேன், என்னுடைய ஜூனியர் மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்கள்
மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். புதிய மன்னர்களின் ராஜ்யம் தொடங்கியிருந்தது.
ஆண்டுகள் பல கழிந்தன, இப்போது பனி படர்ந்த மிச்சிகனில் வாழ்க்கை.
சுற்றிலும் Oak, Maple இன்னும் பல பெயர் தெரியாத மரங்கள். இலையுதிர் காலத்தில் கலர் கலராக நிறம் மாறி மாயா ஜாலம் காட்டும் மரங்கள்.
" என்னங்க.. புதுசா Trader Joe's-னு ஒரு கடை திறந்திருக்கான், நிறைய Organic fresh items வச்சியிருக்கான்.. கிளம்புங்க.. போலாம்.. எப்ப பார்த்தாலும் laptop-ல எதயாவது நோண்டிகிட்டு.."
மனைவி நச்சரிக்க ஆரம்பித்தாள். ஆர்வமில்லாமல் கிளம்பி போனேன். சுற்றி வரும் போது எதேச்சயாக அது கண்ணில் பட்டது, எடுத்து வைத்தேன்
" ஐயைய.. இத எதுக்கு எடுத்து வக்கிறீங்க..? " மனைவி கேட்க
"இல்ல.. இது வேணும்.. சொன்னா ஒனக்கு புரியாது.." சொல்லிவிட்டு அதை எடுத்து வைத்தேன்.
அது Product of Mexico என்று label ஒட்டி அழகாக see through packet -இல் வைக்கப்பட்ட ஒரு கொத்து ஓட்டு புளியம் பழம்.
இன்னும் பிரிக்கவில்லை .. அப்படியே வைத்திருக்கிறேன்.
நன்றி : படங்கள் google-லில் பெறப்பட்டவை.
No comments:
Post a Comment