Friday, March 16, 2012

ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல.!!

முன்குறிப்பு :
இந்த கட்டுரை ஹிந்தி மொழிக்கு எதிரானது அல்ல. நான் ஹிந்தியை வெறுப்பவனும் அல்ல. அதே சமயம் தமிழ் மொழி வெறி பிடித்தவனும் அல்ல.நாளைக்கே அஸ்ஸாமி படித்தால்தான் சோறு கிடைக்கும் என்றால் இன்றைக்கே அஸ்ஸாமி படிக்க துவங்கும் ஆசாமிதான் நான்..!!, இந்த கட்டுரையின் நோக்கமே தவறாக புரிந்து கொண்டிருக்கும் விஷயங்களை தெளிவுபடுத்துவதுதான்.
இந்தியாவின் தலைநகரம் :புது டெல்லி 
இந்தியாவின் தேசிய பறவை : மயில்
இந்தியாவின் தேசிய விலங்கு : புலி
இந்தியாவின் தேசிய மொழி : ஹிந்தி.  ???


இந்தியாவின் தேசிய மொழி எது? என்ற கேள்விக்கு உடனே எல்லோரும் சொல்லும் பதில் ஹிந்தி. அதுவும் நீங்கள் ஹிந்தி பேசும் மக்களுடன் இருக்கும் போது , அவர்கள் ஹிந்தியில் பேச்சை துவங்க நீங்கள் உங்களுக்கு ஹிந்தி தெரியாது என சொல்ல " அரே..!!  ஹிந்தி... ராஷ்டிர பாஷா.!!  As a Indian.. you should learn our national language.. "  என்ற அறிவுரை உங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். நானும் ரொம்ப நாட்களாக இந்த பாழாய் போன தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் இப்புடி செஞ்சிபுட்டான்களே என்று திட்டிக் கொண்டிருந்தேன். சமீபத்தில் Wikipedia  வில் இந்தியாவை பற்றி படிக்க நேர்ந்தது. விக்கிபீடியா என்ன சொல்கிறது என்றால் இந்தியாவிற்கு தேசிய மொழி எதுவும் கிடையாது. அதாவது இந்திய அரசியல் அமைப்பு சாசனம் எந்த மொழியையும் தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை, அதனால் இந்தியாவிற்கு தேசிய மொழி என்று ஒன்று கிடையாது.
விக்கிபீடியா சொல்லும் உண்மை 

அதே சமயம் ஹிந்தியும், ஆங்கிலமும் Official Language என்று வரையருக்கப்பட்டுளன. இதன் அர்த்தம் என்னவென்றால் மத்திய அரசாங்கத்திற்கும் அதன் சார்ந்த துறைகளுக்கும், மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனங்களுக்கும் இந்த இரண்டு மொழிகளும் Official Language  ஆகும்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் Official Language  தேர்வு செய்யும் அதிகாரம் அந்தந்த மாநிலங்களுக்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 5  மாநிலங்களே (உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார் , டெல்லி, ராஜஸ்தான் )  ஹிந்தியை அந்த மாநில Official Language  ஆக தேர்வு செய்துள்ளன. ஆக இந்த 5  மாநிலங்களை தவிர மற்ற மாநில அரசுகளுடனோ அல்லது அந்த அரசு சார்ந்த துறைகளுடனோ நடைபெறும் பரிவர்த்தனம் ஆங்கிலமோ அல்லது அந்த மாநில Official Language -லோ நடைபெற வேண்டும். உதாரணமாக மகாராஷ்டிரா அரசுடன் நடைபெறும் communication
மராட்டியிலோ அல்லது ஆங்கிலத்திலோ இருக்க வேண்டும்.  இதன்படி பார்த்தாலும் மத்திய அரசின்  Official Language  இல் ஒன்றான ஹிந்தியின் மூலம் மேற்சொன்ன 5 மாநில அரசுகளுடன்தான் பரிவர்த்தனம் செய்யமுடியும். ஆனால் ஆங்கிலத்தின் மூலம் அனைத்து மாநில அரசுகளுடனும் பரிவர்த்தனம் செய்ய முடியும் என்பது உள்ளங் கை நெல்லிக்கனி போல் தெள்ளத் தெளிவாக புரிகிறது.

இதில் நீதித் துறை சற்றே வித்தியாசமானது.  ஒவ்வொரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் எந்த மொழியில் வாதிடலாம் என்பதை முடிவு செய்யும் அதிகாரம் டெல்லி உச்ச நீதி மன்றத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு உயர் நீதி மன்றம் தமிழில் வாதிட உச்ச நீதி மன்றத்திடம் அனுமதி கேட்டு அதுவும் அங்கீகரிக்கப் பட்டுள்ளதால் சென்னை உயர் நீதி மன்றத்தில் தமிழிலேயே வாதிடலாம். 


சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஒரு பிரபல கம்பனியின் பிஸ்கட் பாக்கெட்டில் விபரங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்   பட்டு உள்ளதை எதிர்த்து ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

 வழக்கின் விபரம்:
 " இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஒரு பொருளில் இந்தியாவின் தேசிய மொழியான ஹிந்தியில் விபரங்களை அச்சடிக்காமல் ஆங்கிலத்தில் அச்சடித்திருப்பது  தண்டனைக்குரியது..!!"


வழக்கினை விசாரித்த நீதி மன்றம் கீழ் கண்ட தீர்ப்பை வழங்கியது,
"இந்திய அரசு ஆணைப்படி எந்த ஒரு மொழியும் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.. பொதுவாக எல்லோரும் ஹிந்தியை தேசிய மொழி  என்று சொன்னாலும் சட்டப்படி அதற்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.. ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல ..ஆகவே வழக்கு தள்ளுபடி செய்யபடுகிறது..".


  இது என்னுடைய சொந்த புனைவு அல்ல. இதற்கான ஆதாரம் இதோ இங்கே:


Times Of India:
http://articles.timesofindia.indiatimes.com/2010-01-25/india/28148512_1_national-language-official-language-hindi


The Hindu:
http://www.thehindu.com/news/national/article94695.ece

உண்மை இப்படி இருக்க அனைத்து பள்ளிகளிலும் ஹிந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தவறாக சொல்லிக் கொடுக்கப்படுகிறது. ஏன் இவ்வாறு தவறாக சொல்லித்  தரப்படுகிறது? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.


இதே போல இந்தியாவின் தேசிய கீதம் "ஜன கன மன கதி .."  நிறையபேர்  ஹிந்தியில் எழுதப்பட்டது என்று நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இது பெங்காலி மொழியில் எழுதப்பட்டது என்பதுதான் உண்மை.
இன்னொரு கொசுறு உண்மை, அமெரிக்காவுக்கும் தேசிய மொழி இல்லை. ஏனென்றால் அமெரிக்ககா விடுதலை அடைந்த போது அப்போது இருந்த ஸ்பானிஷ் மற்றும் பிரெஞ்சு சிறுபான்மை மக்களை கருத்தில் கொண்டு
ஆங்கிலத்தை தேசிய மொழியாக அங்கீகரிக்கவில்லை.

இனி உங்களை யாராவது இந்தியாவின் தேசிய மொழி எது? என்று கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்லவேண்டும் என்பது தெளிவாகியிருக்கும் என்ற எண்ணத்துடன் இந்த பதிவை முடிக்கின்றேன்.

Friday, March 9, 2012

அகபெல்லா - ஒரு அட்டகாசம்..!!

        என்ன இது? நக்கீரன், ஜூனியர் விகடன் அட்டைப்பட செய்தி போல ஒரு தலைப்பு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு Grand Rapids -ல் நடந்த பொங்கல் விழாவில் நாங்கள் செய்த அட்டகாசம்.

       சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரும் பொங்கல் விழாவை எப்படி நடுத்துவது என தீர்மானிக்க வழக்கம்போல கலை ஆர்வம் கொண்ட எங்கள் குழுவைக்  கூட்டினோம். எங்கள் குழுவுக்கென்று சில எழுதப்படாத விதிகள் உள்ளன,

1 ) கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வாய்க்கு ருசியான ஒரு பதார்த்தத்தை செய்து எடுத்து வரவேண்டும்.

2)  First EATING,  then only MEETING.

ஆக மேற்சொன்ன இந்த கட்டாய விதிகளின் படி அன்று அருமையான சில பல தோசைகளையும் , வடைகளையும் உண்டு களித்து பின் களைத்து meeting  யை  தொடங்கினோம். பொதுவாக கலை நிகழ்ச்சிகள் எப்போதும் வெறும் பாட்டும், டான்சுமகா இருக்கிறது , அதில் புதுமையை புகுத்த வேண்டும் என முடிவெடுத்தோம். ஆளாளுக்கு புதுமைப் பித்தனாக மாறி புதுப்  புது ஐடியாக்களை அள்ளி வீசினோம்.  வில்லுப் பாட்டு, தெருக் கூத்து , சிலம்பாட்டம் என்று.. இன்னும் சொல்லப் போனால் குடுகுடுப்பை, பூம் பூம் மாட்டுக்காரன் வரை சென்று பாரம்பரிய கலைகளை அலசி ஆராய்ந்தோம். அந்த சமயத்தில் ஒருவர் சத்தமாக சொன்ன வார்த்தைதான் "அகபெல்லா".  இந்த வார்த்தையை என் வாழ்க்கையில் நான் முதல் முறையாகக்  கேள்விப்படுகின்றேன். என்னைப் போலவே நிறைய பேருக்கும் இதுவே முதல் முறை என்பது பலரும் கேட்ட கேள்வியில் இருந்து தெரிந்தது.  இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு,
அகபெல்லா (A Cappella):
இது ஒரு இத்தாலி வார்த்தை. இதன் நேரடி அர்த்தம் "தேவாலயத்தின் முறையில்" .அதாவது பாடலை-இசையை எந்தவொரு இசைக்கருவிகளும் இல்லாமல் முற்றிலும் மனித குரலின் வழியாக இசைப்பது அகபெல்லா எனப்படும் . அந்த காலத்தில் இத்தாலியில் தேவாலயங்களில் இசைக் கருவிகள் தடை செய்யப்பட்டவை, எனவே இந்த வகையான பாடும் முறை தோற்றிவிக்கப்பட்டது. மேலும் இதைப் பற்றி விபரம் தேவைப்படுபவர்களுக்கு --> Google.com.

அகபெல்லா வை பொங்கல் விழாவில் அரங்கேற்றுவது என முடிவெடுத்தோம். எங்கள் குழுவில் கர்நாடக இசையில் திறமை வாய்ந்த , குழந்தைகளுக்கு கர்நாடக இசையை கற்றுத்தரும் பள்ளி நடத்தி வரும் ஒருவர் உள்ளார். அவர் இதை முழு பொறுப்பேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.அவர் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "ஏன் இதயம் நொறுங்கவே.."  பாடலின் முதல் பகுதியுடன் வேறு சிலவற்றியும் இணைத்து கடைசியில் James Bond theme music  -கில் முடியும் படியான ஒன்றை தேர்வு செய்து வைத்திருந்தார். இது போல விஜய் TV  -இல் செய்தார்கள் என கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளி இரவும் practice  என முடிவுசெய்யப்பட்டது. 

     முதல் வெள்ளி இரவு practice -க்கு போனேன். சங்கீதம் எந்த அளவுக்கு தெரியும் என்றார்?  அரியக்குடி ராமானுஜ ஐயர், பாலக்காடு மணி ஐயர் போன்ற பெரியவர்களிடம் சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன் , ஆனால் கற்றுக் கொள்ள சந்தர்பம் அமையவில்லை. இதுவரை சங்கீத பயிற்சியை கூட நேராக பார்த்ததில்லை, அலைகள் ஓய்வதில்லை சினிமாவில் பார்த்ததோடு சரி என்று சங்கீதத்தில் பூஜியம் என்பதை சுற்றி வளைத்து சொன்னேன். 

உடனே என்னை percussion  team -இல் சேர்த்துவிட்டார். 

" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   என்று கத்திக்கொண்டிருந்த  குரூபுடன் நானும் ஐக்கியமாகி " பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   சொல்ல ஆரம்பித்தேன்.  
கொஞ்ச நேரத்திலேயே நாக்கு வறண்டு தண்ணி தாகம் எடுத்தது. என்னுடைய  நெருங்கிய நண்பர் கொஞ்சம் சங்கீத ஞானம் உள்ளவர். எப்போது பார்த்தாலும் யேசுதாஸ் மற்றும் கிஷோர் குமார்  பாடல்களையும் முனுமுனுத்துக் கொண்டிருப்பார். அவர் சற்று தள்ளி " தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."  என்று இன்னொரு குரூபுடன் பாடிக்கொண்டிருந்தார்.அவருடைய முகத்தில் சற்று பெருமை தெரிந்தது, அதாவது என்னைப்  போல " பூம் பூம்" சொல்லாமல் ஒரு படி மேலாக கீர்த்தனை போல " தீம்த.. தனனனா" பாடுகிறாராம். இன்னொரு குரூப் "ஏன் இதயம் நொறுங்கவே.."  என்று பாடலின் முதல் பகுதியை நொறுக்கிக் கொண்டிருந்தது. அன்று practice  முடிந்து வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மறுநாள் இந்தியாவில் இருக்கும் அப்பாவுக்கு வழக்கம் போல week end  phone செய்து பேசினேன்.

" எப்ப பாரு வெளையாட்டு.. ஒழுங்கா பேசுடா.. இப்பதான் M.R. ராதா மாதிரி 
மிமிக்ரி பண்ணிக்கிட்டு..பேசறது ஒன்னும் புரியல.."   என்று மறு முனையில் இருந்து அப்பா திட்டினார்.

"நா.. மிமிக்ரி பண்ணல.. என்னோட குரல் அப்படி ஆயிடிச்சி.. " என்று   M.R. ராதா  குரலிலேயே விளக்கம் கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு பாலில் பணங்கல்கண்டு போட்டு குடித்து தொண்டையின் கரகரப்பை போக்கினேன். 

அடுத்த வாரம் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து practice செய்தோம். 
முதல் வரிசை "ஏன் இதயம் நொறுங்கவே.." பாட, இரண்டாம் வரிசை 
" தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."   பாட மூன்றாம் வரிசை "" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."    செய்ய வேண்டும்.

"ரெடி 1, 2 , 3.."  என்றவுடன் ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் எனக்கு நேராக இரண்டாம் வரிசையில் இருப்பவர் பாடுவதை நிறுத்திவிட்டு திரும்பினார்.

"கொஞ்சம் பார்த்து பாடுங்க.. எச்சிய நிறைய என்னோட கழுத்துல துப்புரிங்க.."     
என்றார்.

"sorry.. very sorry.."  என்று சொல்லி அவர் துடைத்துக்கொள்ள பேப்பர் நாப்கின் எடுத்துக் கொடுத்தேன். அதன் பின் மெதுவாகப் பாடஆரம்பித்தேன்.

"கடைசி row.. volume ரொம்ப கம்மி.."  என்று பயிற்சியாளரிடம் இருந்து சப்தம் வந்தது. மறுபடியும் சத்தமாக பாட ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் இருப்பவர் மறுபடியும் கழுத்தை  நாப்கின்னால் துடைக்க ஆரம்பித்தார். இப்படியாக அந்த வாரம் எனக்கு தர்மசங்கடமாக முடிந்தது.

அதற்கடுத்த வாரம் practice  ரொம்ப நன்றாக இருந்தது, ஏனென்றால் பாடுவதை
விட்டுவிட்டு பொங்கல் அன்று stage -ல்  என்ன dress போடுவது என்ற முக்கியமான topic யை நண்பரின் மனைவி ஆரம்பிக்க, மிக தீவிரமாக அந்த ஆலோசனை நடந்தது.  கோட் சூட், வேட்டி சட்டை, குர்தா பைஜாமா என்று அனைத்து வகையான டிரஸ்களையும் பரிசீலித்தோம். ஒரு நண்பர் ஜப்பானின் கிமோனோ டிரஸ்யைக் கூட பரிந்துரைத்தார். ஒரு வழியாக budget  காரணங்களால் எளிமையாக கருப்பு பேன்ட் , ப்ளூ ஷர்ட் என்று முடிவு செய்யப்பட்டது.  

அதற்கடுத்த இரண்டு வாரமும் கடுமையான பயிற்சி அளிக்கப் பட்டது. ஸ்ருதி சேரவில்லை என்று ஸ்ருதி பாக்ஸ்யை இரண்டாம் வரிசையில் வைத்து அதே ஸ்ருதில் பாட சொன்னார்கள். அது வேறு "ங்ங்கொய்....." என்று கத்திக்கொண்டிருந்தது.

கடைசியாக நாங்கள் மேடை ஏற வேண்டிய அந்த பொங்கல் திருநாளும் வந்தது. எங்கள் குழுவில் உள்ள ஒருவர் நாங்கள் practice  செய்யும்போது வித விதமாக போட்டோ எடுத்து  ஒரு சின்ன வீடியோ கிளிப்பை உருவாக்கி அதை பொங்கல் விழா ஆரம்பிக்கும் முன் trailer போல ஒளி பரப்பினார். இதனால் வந்திருந்த மக்களிடம் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது, எங்களுக்கு கை கால் ஒதற ஆரம்பித்தது.


"அடுத்து ..A Cappella.. perfomed by Grand Rapids local talents.."   என்று MC announce செய்ய ஒவ்வொரு வரிசையாக மேடை ஏறி எங்கள் position  -இல் நின்றோம்.


"ரெடி..1,2,3.."  என்று சொன்னவுடன் எங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தோம். பாடி முடித்தவுடன் சில நொடிகளுக்கு வெறும் நிசப்தம், அதன் பின் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.


" எல்லா புகழும் இறைவனுக்கே.!!."   நான் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.  

Sunday, March 4, 2012

Sir, I am suffering from fever..

"Sir, As I am suffering from fever " என்ற இந்த வாக்கியத்தை எவ்வளவு பேர் குருட்டு மனப்பாடம் செய்து ஒரு நாள் விடுமுறை தரும்படி பள்ளி ஆங்கிலத்  தேர்வில் கேட்கப்பட்ட லீவ் லெட்டர் கேள்விக்கு பதில் எழுதினீர்கள் என்று எனக்கு தெரியாது,  ஆனால் என்னுடைய பள்ளிப் பருவத்தில் நான் குருட்டு மனப்பாடமாக இதை எழுத வைக்கப்பட்டேன் . அந்த மனப்பாடத்தின் பாதிப்பு இன்றளவும் உள்ளது,  இப்போதும் I am suffering  என்றவுடன் from fever என்று அனிச்சையாக கை எழுதுகிறது.

இந்த லீவ் லெட்டர்யை மனப்பாடம் செய்ய வைத்த ஆசிரியர் Suffering என்ற வார்த்தையை விளக்கவும் இல்லை , லீவ் லெட்டர் என்றால் என்ன? அதை எந்த format  இல் எழுத வேண்டும் என்று சொல்லவும் இல்லை.  இது ஆங்கில பாடத்தின் கதி என்றால் , வரலாறு , அறிவியல் அனைத்தும் இதே போலத்தான்.பானிப்பட் போர் சிறு குறிப்பு வரைக, நியூட்டனின் இரண்டாம் விதியை விளக்கு இவையெல்லாம் அந்த வகையில் சேர்ந்தவைதான்.

அனேகமாக எல்லா அரசு பள்ளிகளிலும் படித்த மாணவர்களின் கதி இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு தெரியவில்லை,  இருந்தாலும் மனப்பாடம் என்பது பொதுவான ஒரு அம்சமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ளது எனபது என் கருத்து. தற்போது நிறைய தனியார் பள்ளிகளில் +1 subject களை எடுக்காமல் நேராக +2 subject களை எடுப்பதாக கேள்விப்படுகிறேன். என்ன கொடுமை இது? அதே போல் கோடை விடுமுறையும் கிடையாது.  நமது தமிழ் நாட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளின் கல்வி முறை மற்றும் தரம் ஆரோக்கியமாக இல்லை என்பதே எதார்த்தம்.

அமெரிக்கா போன்ற வளர்ந்த நாட்டில் உள்ள ஒரு பள்ளியையும் அதன் கல்வி முறையையும் இந்தியா போன்ற வளரும் நாட்டின் பள்ளியுடன் ஒப்பிட முடியாது என்றாலும் , சமீபத்தில் நான் இங்குள்ள ஒரு பள்ளியை சுற்றிப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோது எனக்கு பொறாமையாகத்தான் இருந்தது ,  நான் சின்ன வயதில் இந்த பள்ளியில் படிக்காமல் போய்விட்டேனே என்று. அதுவும் நான் சென்ற பள்ளி முற்றிலும் புதுமையாக கிட்டத்தட்ட நம்முடைய குருகுல கல்வி போல தோன்றியது.  

இந்தப் பள்ளியின் பெயர் "Goodwillie Environmental School" ,  இது Grand  Rapids -க்கு அருகில் Ada  என்ற ஊரில் உள்ளது. Amway Company  யின் Head Quarters -ம் இந்த ஊர் தான்.இந்த பள்ளியும் அரசாங்க பள்ளிதான். காலை 7.45 am  க்கு பள்ளி தொடங்குகிறது. School  Bus அரை மைல் முன்பாகவே மாணவர்களை இறக்கி விட்டு விடுகிறது, அனைவரும் காட்டுப் பாதை வழியாக நடந்து ( வெயிலோ , மழையோ, பனியோ  )  பள்ளியை அடைகிறார்கள்.

திட்டமிட்ட period schedule  எதுவும் இல்லை. அன்று போன பின்தான் என்ன நடத் தப்போகிறார்கள் என்பது மாணவர்களுக்கு தெரியும். Photography  யில் பிரபலமான ஒருவர் வருகிறார். ஒரு class யை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு digital camera வை கொடுத்து வெளியில் போய் Photo  எடுத்து விட்டு வாருங்கள் என்று அனுப்பி வைக்கிறார். ஒரு மணி நேரத்திற்குள் வரவேண்டும் என்கிறார்.

இன்னொரு class மாணவர்கள் கண்ணைக் கட்டிக்கொண்டு காட்டுக்குள் அமர்ந்து,  கேட்கும் பறவை ஒலிகளை இனம் கண்டு தங்கள் குறிப்பில் எழுதுகிறார்கள். இன்னொரு குரூப் மாணவர்கள் சுட்ட செங்கல் செய்து கொண்டிருக்கிறார்கள். நிறைய வகுப்புகள் இவர்கள் செய்த செங்கல்லால் கட்டப்பட்டவை என்பதை நம்ப முடியவில்லை.

Capital, dividend , operating cost  ,marketing  போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் எனக்கு  அர்த்தம் தெரிய ஆரம்பிக்கும் போது எனக்கு கழுதை வயதாகி இருந்தது. இந்த பள்ளியில் ஐந்தாவது , ஆறாவது படிக்கும் குழந்தைகள் சேர்ந்து ஒரு சின்ன கோழிப் பண்ணையை (சுமார் முப்பது  கோழிகள் ) நடத்துகிறார்கள். மாணவர்களே கோழிப் பண்ணையின் CEO வாக அவர்களுள் ஒருவரை தேர்ந்தெடுக்கிறார்கள். Finance, Sales, Budgeting, Operations போன்ற குழுக்களை பிரித்து நிர்வாகம் செய்கிறார்கள். ஒரு brand  பெயரையும் தேர்வு செய்து இங்குள்ள உள்ளூர் கடைகளுக்கு விற்பனை செய்கிறார்கள். இந்த வயதிலேயே ஒரு டஜன் முட்டைக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யவேண்டும் என்பதை தெரிந்து இருக்கிறார்கள்.

பல்கலைக்கழகம் என்பதற்கு பல கலைகளை ஒரே இடத்தில் கற்பிக்கும் இடம் என்று பொருள். அதாவது இலக்கியம், அறிவியல் , மருத்துவம் , பொறியியல் மற்றும் சட்டம் போன்ற பல துறைகளை உள்ளடிக்கிய ஒரு கல்வி நிறுவனமே  பல்கலைக்கழகம். ஆனால் இன்றைய தமிழ் நாட்டு பல்கலைக்கழகங்களின் நிலை என்ன?  Dr.MGR Medical University வெறும் தேர்வுகளை நடத்தும் ஒரு நிறுவனமாக உள்ளது. எதாவது மருத்துவ சம்பந்தமான ஆராய்ச்சி நடைபெறுகிறதா? புதிய கண்டுபிடிப்புகள் நிகழ்ந்ததா?  இல்லை என்பதே இதற்கான பதில். இதே நிலைதான் அண்ணா பல்கலைக்கழகத்திற்கும் - தேர்வு நடத்தும் ஒரு தேர்வாணையம்.

இப்படிப்பட்ட பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் படித்து வரும் மாணவர்களின் திறமை, எண்ணங்கள், உழைப்பு எப்படி இருக்கும்? அரசியல்வாதிகளும் , கல்வி துறையின் பெரும் பதவிகளில் வகிப்பவர்களும் தங்கள் சுய லாபத்திற்காக அவர்களது புகழ் பாடும் பாடங்களை பாடத்திட்டத்தில் புகுத்துகிறார்கள். இதை படிக்கும் மாணவர்களுக்கு இதனால் எந்த பயனும் இல்லை. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால்

" கல்வி சிறந்த தமிழ்நாடு .."  என்ற பாரதியின் வரிகள் நகைப்பிற்குரியதாகிவிடும்..!!!  

இந்த பள்ளியின் இணைய முகவரி: http://fhps.us/goodwillie/

(நன்றி:  புகைப்படங்கள் Google  லிருந்து எடுக்கப்பட்டவை.)


Saturday, March 3, 2012

குடலராஜா -3 (last part).


Mexico City Street.
Taxi சந்து பொந்துக்களில் நுழைவதை பார்த்து பயந்தேன். அதன் பின்தான் புரிந்தது அது தேவையற்ற பயம் என்பதும், driver  traffic  jam -யை தவிர்க்க குறுக்கு வழியில் போகிறார் என்பதும். சுமார் ஒரு மணி நேர பயணத்திற்கு பின் சுற்றுப்புற சூழல் முற்றிலும் மாறியது. உயர உயரமான நவீன கட்டிடங்கள்,  Audi, Benz, BMW , Renault  car show rooms, வித விதமான restaurants, Shopping Malls என்று அமெரிக்காவின் இன்னொரு நகருக்குள் வந்தது போல தோன்றியது, அந்த இடத்தின் பெயர் Santa Fe என்றும் , மெக்சிகோ சிட்டியின் மேல் தட்டு மக்கள் வசிக்கும் பகுதி என்பதும் பின்னர் தெரிந்து கொண்டேன்.Taxi ஒரு அழகான கட்டிடத்தின் முன் நின்றது, ஹோட்டல் வந்து விட்டதை புரிந்துகொண்டேன்.

       பத்திரமாக கொண்டுவந்து சேர்த்ததற்காக தாரளமாக tips கொடுத்துவிட்டு  ஹோட்டலுக்குள் நுழைந்தேன். நல்ல வசதியான ஹோட்டல், Check in  முடித்துவிட்டு Office  -க்கு கிளம்பினேன். சுமார் நான்கு block  தள்ளிதான் office.
Santa Fe
ஆபீஸ் உள்ளே நுழைந்து நான் சந்திக்க வேண்டிய மேனேஜர்யை சந்தித்து அறிமுகப்படித்துக் கொண்டேன். அவர் என்னை அழைத்துக்கொண்டு இன்னொரு அறைக்குப் போனார். அங்கே ஒரு அழகான இளம் பெண் அமர்ந்திருந்தாள். உள்ளே நுழைந்த உடன் ஏதோ ஸ்பானிஷ்ல் சொன்னார், அந்த பெண் எழுந்து அவர் கன்னத்தின் அருகில் வந்து "ம்ம்மா"  என்று ஒரு முத்தம் கொடுப்பது போல செய்தாள், பதிலுக்கு அவரும் அவள் கன்னத்தில் "ம்ம்மா"  என்று கொடுத்தார்.  நான் இதை ஆச்சர்யத்துடன் பார்த்து கொண்டிருக்கும் போதே என் கன்னத்தின் அருகில் வந்து "ம்ம்மா" என்று செய்து விட்டு , அவள் கன்னத்தை காட்டினாள். ஒரு கணம் ஒன்றும் புரியாமல் "தேமே"   என்று முழித்துவிட்டு பின் சுதாரித்துக் கொண்டு நானும் "ம்ம்மா" என்று ஒன்று கொடுத்தேன். உடம்பிற்குள் ஒரு உற்சாகமும் , ஒரு freshness  -ம் பிறந்தது போல இருந்தது. சுருக்கமாக சொன்னால் ஹார்லிக்ஸ்ம் , பூட்ஸ்ம் கலந்து குடித்தது போல இருந்தது.

"இவள் பெயர் பவுலா.. from Argentina , இவளுக்கு இங்கிலீஷ்ம் நன்றாக தெரியும், உன்னுடைய team -ஐ இவள் அறிமுகப் படுதுவாள்..உனக்கு ஸ்பானிஷ் புரியாத இடங்களில் இவள் translate செய்து உதவுவாள்.. "  என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பிவிட்டார்.

பவுலா சின்ன skirt -ம், tight ஆன T-Shirt -ம், நல்ல உயரமான ஹீல்ஸ்ம்  போட்டிருந்தாள். என்னை நான் work  பண்ண வேண்டிய team -க்கு அறிமுகப்படுத்த அழைத்துக்கொண்டு போனாள். என் Cell Phone சினுங்கியது, எடுத்தால் என் மேனேஜர்,

" ஹாய்.. மெக்ஸிகோ எப்படி இருக்கிறது? பயமாக இருக்கிறதா ..?  Are you safe and comfortable? "  என்றார்.

"   மெக்ஸிகோ சுகமாக இருக்கிறது.. ரொம்ப comfortable ஆக இருக்கிறேன், இப்பொது ஒரு meeting  -க்கு போய்கொண்டிருக்கிறேன், அப்புறமாக பேசலாம்   " என்று சொல்லி மேனேஜர்யை cut செய்தேன் , "நேரம் காலம் தெரியாமல் phone  செய்து கொண்டு.." என்று மேனேஜர்யை மனதிற்குள் திட்டினேன்.

சப்பாத்தி கள்ளி , சைவ உணவு. 
மீச்சிலாடா 
 பவுலா என்னை team members  வுடன் அறிமுகப்படித்திவிட்டாள். இங்கும் பெண்களுக்கு "ம்ம்மா" வும், ஆண்களுக்கு கை குலுக்கலும் செய்யவேண்டி இருந்தது. மதியும் 1 மணி சுமாருக்கு lunch -க்கு கிளம்பினோம். நிறைய பேர் casual ஆக பீர் வாங்கி லஞ்ச் டைம் இல் சாப்பிடுவது ஆச்சர்யமாக இருந்தது. அதிலும் குறிப்பாக "மீச்சிலாடா"  (பீருடன் எலுமிச்சை சாரு, உப்பு மற்றும் சில மசாலாக்கள் கலந்தது , ஐஸ் கட்டிகள் போட்டது )  நிறைய சாப்பிட்டார்கள். அமெரிக்காவைப்போல அல்லாமல் லஞ்ச்க்கு ரொம்ப நேரம் செலவிடுகிறார்கள், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து ஆபீசிக்கு வந்தோம். Project Installation  பற்றி பேச ஆரம்பித்தோம்.


முதல் கட்டமாக Guadalajara  என்ற ஊரில் installation  செய்வதாக உத்தேசம்.
ஆகவே என் பேச்சில் அடிக்கடி "குடலராஜாவில் இன்ஸ்டால் செய்யும்போது .." என்று பேசிக்கொண்டிருந்தேன். பவுலா என்னை இடைமறித்து

"குடலராஜா.. குடலராஜா..என்று சொல்கிறாயே .. அது என்ன technology? அதை பற்றி இவர்கள் கேள்விப்பட்டதில்லை என்கிறார்கள்.. நீ கொஞ்சும் அதை விளக்கமாக சொல்லமுடியுமா? "  என்று கேட்டாள்.

அடக் கடவுளே ..!!   இவ்வளளு நேரம் நான் சொன்னது யாருக்கும் புரியவில்லையா.. ?

" நாம் இன்ஸ்டால் செய்யப்போகும் ஊர்தானே குடலராஜா? அதைத்தான் சொல்கிறேன் .. டெக்னாலஜி பேர் எல்லாம் கிடையாது .." என்றேன்.

அவள் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு சொன்னாள்,  ஸ்பானிஷில் J  யை H  ஆகவும் G யை sometimes silent ஆகவும் உபயோகிக்கவேண்டும் என்றாள்.
ஆகவே அந்த ஊரின் பெயர் குடலராஜா அல்ல "க்குவடலஹாரா.."  என்பதை தெரிந்து கொண்டேன். அந்த வார சனி ஞாயிறு அங்கேயே தங்க வேண்டி இருந்தது.  மெக்ஸிகோ சிடியை சுற்றிப்பார்க்க என் team member வுடன் கிளம்பினேன். அவன் Peru  நாட்டை சேர்த்தவன் , ஸ்பானிஷ் உடன்  ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் அவனுடன் சென்றேன்.

நம்மூர் முறுக்கு அல்ல.. இது வேறு..!!  
லோக்கல் டவுன் பஸ்சில் பயணம் செய்தோம். தமிழ்நாட்டில் பிரைவேட் பஸ்சில் வெங்கடாஜலபதி, முருகன் படம்  இருப்பது போல Jesus  படத்தை வைத்து ஊதுபத்தி கொளுத்தி வைத்திருந்தார்கள். லோக்கல் மெட்ரோ ட்ரெயினிலும் பயணம் செய்தோம். சென்னையை போலவே ட்ரெயினில் நிறைய பேர் எதை எதையோ விற்றுக்கொண்டும்,  பாடிக்கொண்டே பிச்சை எடுப்பதும், உங்கள் மடியில் பிரிண்ட் செய்யப்பட்ட சோகக் கதை சொல்லும் பேப்பர்யை வைத்து பிச்சை எடுப்பதும் சகஜமாக இருந்தது. இந்தியாவைப் போலவே மக்கள் அவரவர் வேலைகளில் பிஸியாக இருந்தார்கள்.  
 
ஒரு இடத்தில வண்ண வண்ண உடை அணிந்த அழகான இளம் பெண்கள் நிறைய பேர் நின்று நடனமாடிக்கொண்டிருந்தார்கள். உடல் ஊனமுற்ற பெண்களும் அவ்வாறே ஆடை அணிந்து அமர்ந்து இருந்தனர்.என் நண்பர் என்னவென்று விசாரித்து வந்தார். அவர் வந்து சொன்ன விஷயம் ஆச்சர்யமா இருந்தது.

எப்படி தமிழ்நாட்டில் வயதுக்கு வரும் இளம் பெண்களை அழகாக அலங்கரித்து சடங்கு செய்வார்களோ, அதே போல மெக்ஸிகோவிலும் செய்வார்களாம். ஆனால் பணக்கார வீட்டு பெண்களுக்கு செய்வது போல ஏழை வீ ட்டு பெண்களுக்கு செய்ய முடிவதில்லை. சிலர் பணம் இல்லாமல் இந்த சடங்கை நிறுத்திவிட்டார்கள். வயதுக்கு வரும் ஏழை பெண்களுக்கு அந்த மன வருத்தம் இருக்கக் கூடாதென்று அரசாங்கமே செலவு செய்து இந்த விழாவை நடத்துவதாகவும் , அதில் கலந்து கொள்ள உடை மற்றும் அனைத்து செலவும்  அரசாங்கமே ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னார். அந்த பெண்கள் அனைவரும் கிட்டத்தட்ட நான்கு ஐந்து பஸ்சில் வந்திருந்தார்கள். இந்த இடத்தில நடனமாடி முடித்தபின் சிட்டியின் வேறு இடத்தில சென்று நடனமாடுவார்கள். அதன் பின் இரவு விருந்தும் அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
          
நம்மூரை போலவே இங்கும் ரோட்டுகடை சாப்பாடு பிரபலம். நாங்களும் ரோட்டுக்கடை சாப்பாட்டை சுவைக்க சென்றோம். ஒரு கடையில் நிறைய கூட்டம், மற்ற கடையிலும் சுமாரான கூட்டம், ஒரு கடையில் மிகவும் குறைவாக கூட்டம். அருகில் சென்று விசாரிக்கும் போதுதான் தெரிந்தது மிகவும் கூட்டமான கடையில் கிடைப்பது ஆட்டு நாக்கு என்பதும் மற்ற கடைகளில் மூளை , ஈரல் என்று பதார்த்தங்களை விற்றுகொண்டிருந்தர்கள் என்பதும். கூட்டமே இல்லாத கடை வெஜிடேரியன் எனபது சொல்லாமலே தெரிந்தது. நான் அங்கு ஓடிவிட்டேன்,என் நண்பர் ஈரலோ , குடலோ எதையோ   
சாப்பிட்டுவிட்டு நன்றாக இருப்பதாக கூறினார். இங்கு அதிகமாக சமையலில் உபயோகிக்கப்படும் காய் நம்மூரில் சப்பாத்தி கள்ளி என்று சொல்லப்படும் முள்ளு முள்ளாக இருக்குமே அந்த செடியின் பாகம்தான். அதன் முள்ளை எடுத்து விட்டு நன்றாக வேகவைத்து சமைத்து தருகிறார்கள். நன்றாக சுவையாக இருக்கிறது.

Tequila  செய்ய உபயோகப்படும் Agave  தாவரம்.   
பிரபலமான Tequila  Brand.
Guadalajara சாப்பாடு. 
அடுத்த வாரம் க்குவடலஹாராவுக்கு சென்றோம். நம்ப செட்டி நாட்டு பகுதி போல இந்த ஊரும் அதன் சுற்றுப்புறமும் சாப்பாட்டிற்கும், Tequila Drinks-க்கும் , மரியாச்சி இசைக்கும் பிரசித்து பெற்றது. இந்த ஊர் வழக்கப்படி சாப்பாட்டை மண்ணில் செய்யப்பட்ட பாத்திரத்தில் செய்கிறார்கள். Drinks யும் மண் குடுவையில் தருகிறார்கள்.
       
இப்படியாக ஆறு மாதம் ஓடியது. ஒரு வழியாக project -யை முடித்து மீண்டும் அமெரிக்காவுக்கு திரும்பினேன். கொஞ்ச நாள் கழித்து Boston -க்கு ஆபீஸ் விசயமாக போனேன்.  அன்று இரவு எல்லோரும் dinner சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்,


" When I was having my dinner , this guy was holding a gun and walking towards me.." 
எங்களுடைய Sales Team Manager சொல்லிக் கொண்டிருந்தார்.

"Where was this..? "  புதிதாக எங்கள் ஆபீசில் சேர்த்த அவன் பயத்துடன் கேட்டான்.

"  Sao Paulo,  Brazil "   என்றார்   Sales Team மேனேஜர்.

நான் மனதில் சிரித்துக்கொண்டே அவர்கள் பேசுவதை கேட்டு ரசித்துக் கொண்டிருந்தேன்.

(முற்றும்).