Friday, March 9, 2012

அகபெல்லா - ஒரு அட்டகாசம்..!!

        என்ன இது? நக்கீரன், ஜூனியர் விகடன் அட்டைப்பட செய்தி போல ஒரு தலைப்பு என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இது இரண்டு மாதங்களுக்கு முன்பு Grand Rapids -ல் நடந்த பொங்கல் விழாவில் நாங்கள் செய்த அட்டகாசம்.

       சென்ற ஆண்டு நவம்பர் மாதம் வரும் பொங்கல் விழாவை எப்படி நடுத்துவது என தீர்மானிக்க வழக்கம்போல கலை ஆர்வம் கொண்ட எங்கள் குழுவைக்  கூட்டினோம். எங்கள் குழுவுக்கென்று சில எழுதப்படாத விதிகள் உள்ளன,

1 ) கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவரும் வாய்க்கு ருசியான ஒரு பதார்த்தத்தை செய்து எடுத்து வரவேண்டும்.

2)  First EATING,  then only MEETING.

ஆக மேற்சொன்ன இந்த கட்டாய விதிகளின் படி அன்று அருமையான சில பல தோசைகளையும் , வடைகளையும் உண்டு களித்து பின் களைத்து meeting  யை  தொடங்கினோம். பொதுவாக கலை நிகழ்ச்சிகள் எப்போதும் வெறும் பாட்டும், டான்சுமகா இருக்கிறது , அதில் புதுமையை புகுத்த வேண்டும் என முடிவெடுத்தோம். ஆளாளுக்கு புதுமைப் பித்தனாக மாறி புதுப்  புது ஐடியாக்களை அள்ளி வீசினோம்.  வில்லுப் பாட்டு, தெருக் கூத்து , சிலம்பாட்டம் என்று.. இன்னும் சொல்லப் போனால் குடுகுடுப்பை, பூம் பூம் மாட்டுக்காரன் வரை சென்று பாரம்பரிய கலைகளை அலசி ஆராய்ந்தோம். அந்த சமயத்தில் ஒருவர் சத்தமாக சொன்ன வார்த்தைதான் "அகபெல்லா".  இந்த வார்த்தையை என் வாழ்க்கையில் நான் முதல் முறையாகக்  கேள்விப்படுகின்றேன். என்னைப் போலவே நிறைய பேருக்கும் இதுவே முதல் முறை என்பது பலரும் கேட்ட கேள்வியில் இருந்து தெரிந்தது.  இதைப் பற்றி தெரியாதவர்களுக்கு,
அகபெல்லா (A Cappella):
இது ஒரு இத்தாலி வார்த்தை. இதன் நேரடி அர்த்தம் "தேவாலயத்தின் முறையில்" .அதாவது பாடலை-இசையை எந்தவொரு இசைக்கருவிகளும் இல்லாமல் முற்றிலும் மனித குரலின் வழியாக இசைப்பது அகபெல்லா எனப்படும் . அந்த காலத்தில் இத்தாலியில் தேவாலயங்களில் இசைக் கருவிகள் தடை செய்யப்பட்டவை, எனவே இந்த வகையான பாடும் முறை தோற்றிவிக்கப்பட்டது. மேலும் இதைப் பற்றி விபரம் தேவைப்படுபவர்களுக்கு --> Google.com.

அகபெல்லா வை பொங்கல் விழாவில் அரங்கேற்றுவது என முடிவெடுத்தோம். எங்கள் குழுவில் கர்நாடக இசையில் திறமை வாய்ந்த , குழந்தைகளுக்கு கர்நாடக இசையை கற்றுத்தரும் பள்ளி நடத்தி வரும் ஒருவர் உள்ளார். அவர் இதை முழு பொறுப்பேற்று நடத்துவார் என அறிவிக்கப்பட்டது.அவர் விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "ஏன் இதயம் நொறுங்கவே.."  பாடலின் முதல் பகுதியுடன் வேறு சிலவற்றியும் இணைத்து கடைசியில் James Bond theme music  -கில் முடியும் படியான ஒன்றை தேர்வு செய்து வைத்திருந்தார். இது போல விஜய் TV  -இல் செய்தார்கள் என கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வெள்ளி இரவும் practice  என முடிவுசெய்யப்பட்டது. 

     முதல் வெள்ளி இரவு practice -க்கு போனேன். சங்கீதம் எந்த அளவுக்கு தெரியும் என்றார்?  அரியக்குடி ராமானுஜ ஐயர், பாலக்காடு மணி ஐயர் போன்ற பெரியவர்களிடம் சங்கீதம் கற்றுக் கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்டேன் , ஆனால் கற்றுக் கொள்ள சந்தர்பம் அமையவில்லை. இதுவரை சங்கீத பயிற்சியை கூட நேராக பார்த்ததில்லை, அலைகள் ஓய்வதில்லை சினிமாவில் பார்த்ததோடு சரி என்று சங்கீதத்தில் பூஜியம் என்பதை சுற்றி வளைத்து சொன்னேன். 

உடனே என்னை percussion  team -இல் சேர்த்துவிட்டார். 

" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   என்று கத்திக்கொண்டிருந்த  குரூபுடன் நானும் ஐக்கியமாகி " பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."   சொல்ல ஆரம்பித்தேன்.  
கொஞ்ச நேரத்திலேயே நாக்கு வறண்டு தண்ணி தாகம் எடுத்தது. என்னுடைய  நெருங்கிய நண்பர் கொஞ்சம் சங்கீத ஞானம் உள்ளவர். எப்போது பார்த்தாலும் யேசுதாஸ் மற்றும் கிஷோர் குமார்  பாடல்களையும் முனுமுனுத்துக் கொண்டிருப்பார். அவர் சற்று தள்ளி " தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."  என்று இன்னொரு குரூபுடன் பாடிக்கொண்டிருந்தார்.அவருடைய முகத்தில் சற்று பெருமை தெரிந்தது, அதாவது என்னைப்  போல " பூம் பூம்" சொல்லாமல் ஒரு படி மேலாக கீர்த்தனை போல " தீம்த.. தனனனா" பாடுகிறாராம். இன்னொரு குரூப் "ஏன் இதயம் நொறுங்கவே.."  என்று பாடலின் முதல் பகுதியை நொறுக்கிக் கொண்டிருந்தது. அன்று practice  முடிந்து வீட்டுக்கு வர ரொம்ப நேரம் ஆகிவிட்டது. மறுநாள் இந்தியாவில் இருக்கும் அப்பாவுக்கு வழக்கம் போல week end  phone செய்து பேசினேன்.

" எப்ப பாரு வெளையாட்டு.. ஒழுங்கா பேசுடா.. இப்பதான் M.R. ராதா மாதிரி 
மிமிக்ரி பண்ணிக்கிட்டு..பேசறது ஒன்னும் புரியல.."   என்று மறு முனையில் இருந்து அப்பா திட்டினார்.

"நா.. மிமிக்ரி பண்ணல.. என்னோட குரல் அப்படி ஆயிடிச்சி.. " என்று   M.R. ராதா  குரலிலேயே விளக்கம் கொடுத்தேன். அடுத்த இரண்டு நாட்களுக்கு பாலில் பணங்கல்கண்டு போட்டு குடித்து தொண்டையின் கரகரப்பை போக்கினேன். 

அடுத்த வாரம் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து practice செய்தோம். 
முதல் வரிசை "ஏன் இதயம் நொறுங்கவே.." பாட, இரண்டாம் வரிசை 
" தீம்த.. தனனனா.. தீம்தான தனன .."   பாட மூன்றாம் வரிசை "" பூம் பூம் சிக் .... சிக் சிக் சிக்.."    செய்ய வேண்டும்.

"ரெடி 1, 2 , 3.."  என்றவுடன் ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் எனக்கு நேராக இரண்டாம் வரிசையில் இருப்பவர் பாடுவதை நிறுத்திவிட்டு திரும்பினார்.

"கொஞ்சம் பார்த்து பாடுங்க.. எச்சிய நிறைய என்னோட கழுத்துல துப்புரிங்க.."     
என்றார்.

"sorry.. very sorry.."  என்று சொல்லி அவர் துடைத்துக்கொள்ள பேப்பர் நாப்கின் எடுத்துக் கொடுத்தேன். அதன் பின் மெதுவாகப் பாடஆரம்பித்தேன்.

"கடைசி row.. volume ரொம்ப கம்மி.."  என்று பயிற்சியாளரிடம் இருந்து சப்தம் வந்தது. மறுபடியும் சத்தமாக பாட ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் இருப்பவர் மறுபடியும் கழுத்தை  நாப்கின்னால் துடைக்க ஆரம்பித்தார். இப்படியாக அந்த வாரம் எனக்கு தர்மசங்கடமாக முடிந்தது.

அதற்கடுத்த வாரம் practice  ரொம்ப நன்றாக இருந்தது, ஏனென்றால் பாடுவதை
விட்டுவிட்டு பொங்கல் அன்று stage -ல்  என்ன dress போடுவது என்ற முக்கியமான topic யை நண்பரின் மனைவி ஆரம்பிக்க, மிக தீவிரமாக அந்த ஆலோசனை நடந்தது.  கோட் சூட், வேட்டி சட்டை, குர்தா பைஜாமா என்று அனைத்து வகையான டிரஸ்களையும் பரிசீலித்தோம். ஒரு நண்பர் ஜப்பானின் கிமோனோ டிரஸ்யைக் கூட பரிந்துரைத்தார். ஒரு வழியாக budget  காரணங்களால் எளிமையாக கருப்பு பேன்ட் , ப்ளூ ஷர்ட் என்று முடிவு செய்யப்பட்டது.  

அதற்கடுத்த இரண்டு வாரமும் கடுமையான பயிற்சி அளிக்கப் பட்டது. ஸ்ருதி சேரவில்லை என்று ஸ்ருதி பாக்ஸ்யை இரண்டாம் வரிசையில் வைத்து அதே ஸ்ருதில் பாட சொன்னார்கள். அது வேறு "ங்ங்கொய்....." என்று கத்திக்கொண்டிருந்தது.

கடைசியாக நாங்கள் மேடை ஏற வேண்டிய அந்த பொங்கல் திருநாளும் வந்தது. எங்கள் குழுவில் உள்ள ஒருவர் நாங்கள் practice  செய்யும்போது வித விதமாக போட்டோ எடுத்து  ஒரு சின்ன வீடியோ கிளிப்பை உருவாக்கி அதை பொங்கல் விழா ஆரம்பிக்கும் முன் trailer போல ஒளி பரப்பினார். இதனால் வந்திருந்த மக்களிடம் எதிர்பார்ப்பு எகிற ஆரம்பித்தது, எங்களுக்கு கை கால் ஒதற ஆரம்பித்தது.


"அடுத்து ..A Cappella.. perfomed by Grand Rapids local talents.."   என்று MC announce செய்ய ஒவ்வொரு வரிசையாக மேடை ஏறி எங்கள் position  -இல் நின்றோம்.


"ரெடி..1,2,3.."  என்று சொன்னவுடன் எங்கள் கைவரிசையை காட்ட ஆரம்பித்தோம். பாடி முடித்தவுடன் சில நொடிகளுக்கு வெறும் நிசப்தம், அதன் பின் கரகோஷம் அடங்க சில நிமிடங்கள் ஆனது.


" எல்லா புகழும் இறைவனுக்கே.!!."   நான் மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.  

2 comments:

  1. அந்த வீடியோவை இணைத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே?

    ReplyDelete