Wednesday, February 17, 2016

என் புளிய மரங்களின் கதை

சுந்தரம் ராமசாமியின் "ஒரு புளிய மரத்தின் கதை" படிக்கும்போது எனக்கு வயது 35 - யை தாண்டியிருந்தது.ஒரு விதத்தில் அதுவும் நல்லதுதான், இல்லாவிட்டால் அந்தக் கதை புரிந்திருக்காது. அந்தக் கதை புளியமரத்தை பற்றியது அல்ல, அந்த மரத்தின் முன், அதன் மேல், அதன் நிழலில் நடக்கும் நிகழ்வுகளின் பதிவு அல்லது தொகுப்பு எனலாம். படித்து முடிக்கும் போது ஒரு அருமையான நெஞ்சை தொடும் ஈரானிய திரைப்படம் பார்த்த உணர்வு.நினைத்துப் பார்க்கும்போது என் வாழ்கையிலும் புளிய மரம் ஒரு காலக்கட்டம் வரை கூடவே இருந்திருக்கிறது.

சின்ன வயதில் தொளசம்பட்டியில் குடியிருந்த வீட்டின் வாசலில் இரண்டு பெரிய புளிய மரம் இருக்கும். ஒன்று நன்றாக வேர் விட்டு வெகு அருகில் திண்ணையை பேர்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று சற்று தள்ளி இருக்கும். நல்ல வாட்ட சாட்டமான குண்டு மரங்கள்.இரவில் அதன் மேல் மூச்சா அடித்திருக்கிறேன், பகலில் அதே மரத்தின் கீழ் விளையாண்டிருக்கிறேன்.அதன் மேல் ஏறும் மொசுக்கட்டை பூச்சிகளை கொன்று என் வீரத்தை நிலை நாட்டியிருக்கிறேன், மரத்தின் பட்டை என்று தொட்டு, பின் அது உயிருடன் இருக்கும் மரப்பல்லி என்று தெரிந்ததும் பயந்திருக்கிறேன்.

 புளிய மரங்களை மே மாதங்களில் பார்க்கக் கூடாது, இலையுதிர்ந்து வெறும் மொட்டை மரமாக பார்க்க பயமாக இருக்கும். ஜூன் மாதத்தில் புதிய இலை துளிர் விட்டு புத்தம் புது இளம் பச்சை நிறத்தில் பார்ப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.புதிதாக துளிர் விடும் புளிய இலையை சாப்பிடலாம், புளியம் பூ, பிஞ்சு, பழம், பழத்திற்கும் காய்க்கும் இடைப்பட்ட பருவமான துவரு, வருத்த புளியங்கொட்டை இப்படியாக புளிய மரத்தின் அத்தனை product - களையும் பலவிதங்களில் ருசித்திருக்கிறேன்.பக்கத்து வீட்டு மோகனா அக்கா அவசரமா வெறும் உப்பு, சிவப்பு மிளகாய் அத்துடன் பச்சை புளியங்காய் வைத்து அரைத்து செய்யும் புளியந் தொவயலுக்கு ஏங்கி இருக்கிறேன்.அந்த இரண்டு மரங்களுமே நன்றாக காய்க்கும். என் கூட படிக்கும் friend-ன் அம்மாதான் 
எப்போதும் அந்த மரங்களின் வருட குத்தகை எடுப்பார். நன்றாக புளியம் பழம் வந்தவுடன் ஆட்களை அழைத்து வந்து மரத்தின் மீது ஏறி உலுக்கி உலுக்கி புளியம் பழத்தை பொறுக்கி மூட்டையாக கட்டி எடுத்து கொண்டு போவார்கள்.அத்துடன் அந்த வருடத்துக்கு என்னுடைய 
புளியம் பழம் snack முடிவுக்கு வரும்.   

ஒன்பதாவது படிக்கும் போது சொந்தமாக வீடு கட்டிக்கொண்டு குடி போனோம். இந்த வீட்டின் முன்பு இரண்டு அல்ல, கிட்டத்தட்ட ஐம்பது புளிய மரங்கள் இருந்தன. அது ஒரு வாரச் சந்தை நடக்கும் இடம். ஒவ்வொரு ஞாயிறும் அந்த புளிய மரங்களின் அடியில் சந்தை கூடும். ஞாயிறு காலை 6.30 மணிக்கெல்லாம் ஆட்டை உரித்து புளிய மரக் கிளையில் தொங்கவிட்டு வியாபாரம் ஜோராக தொடங்கிவிடும். தக்காளி, வெண்டை,அவரை, கரும்பு, தர்பூசணி, குச்சி கிழங்கு எல்லாம் மதியத்திற்கு மேல்தான் டெம்போ van-ல் வந்து இறங்கும்.இங்கு நிறைய மரங்கள் இருந்ததால் எந்த ஒரு தனிப்பட்ட மரத்தின் மீதும் ஈர்ப்பு வரவில்லை. நாட்கள் நகர்ந்தன, காலேஜ் படிக்க சென்றேன். அங்கும் ஒரு புளியமரம். 

நான் சந்தித்த புளிய மரங்களில் இது முற்றிலும் வேறானது. இதை முதன் முதலில் நான் பார்த்ததே சினிமாவில் காண்பிக்கும் introduction scene போலத்தான் இருந்தது. காலேஜ் முகப்பில் இருந்து பார்த்தால் தெரியாது, உயரமான காலேஜ் building-ன் உள்ளே நுழைந்து பின்பக்கம் வெளியே வரும்போது இறங்க படி இருக்காது, temporary-யாக மண்ணை கொட்டி சரிவாக வைத்திருப்பார்கள். அதில் வேகமாக இறங்கி சடாரென திரும்பினால் இந்த புளியமரம் தெரியும். எங்கள் காலேஜ் desk -ல் எவனோ ஒரு சீனியர்

  "மரமே, புளிய மரமே - நீ
   மரம் அல்ல, கல்லூரியின் வரம் "

என்று கவிதை கிறுக்கியிருந்தான். அதன் அர்த்தம் அப்போது புரியவில்லை, அந்த மரத்தை பார்த்த பின்புதான் புரிந்தது நானும் பிற்காலத்தில் 

"  எங்கள் புளிய மரத்திற்கு 
   எப்போதும் வசந்த காலம் - இது
   ரோஜாக்கள் பூக்கும் புதுமை மரம் "   

என்று புதுக் கவிதை எழுதி படிப்பவர்களை தொல்லை படுத்துவேனென்று. காரணம் அந்த புளிய மரத்தடியில் வண்ண வண்ண உடைகளில் கல்லூரியில் படிக்கும் இளம் பெண்கள் இருப்பார்கள். சில கொடுத்து வைத்த மகாராஜாக்கள், காலேஜ் பாஷையில் சொன்னால் கடலை மன்னர்கள் நேரம் போவது தெரியாமல் அவர்களுடன் பேசிக்  கொண்டிருப்பார்கள். அந்த புளிய மரத்தடியில் இருந்துதான் பெண்களுக்கான காலேஜ் பஸ் கிளம்பும். பஸ் கிளம்பியவுடன் கடலை மன்னர்கள் சோகமாக ஹாஸ்டலுக்கு திரும்புவார்கள். நானும் அந்த கடலை போடும் க்ரூபில் சேர தீவிரமாக முயற்சித்தேன். நாலு வார்த்தை தொடர்ந்து இங்கிலீஷ் பேச தெரியாததாலும், நல்லதாக ஒரு ஜீன்சும் ஷூவும் இல்லாததாலும், ஹாஸ்டலில் Anti-கடலை க்ரூப்பின் கன்னா பின்னா ஓட்டுதலுக்கு பயந்தும், இன்னும் சில பல காரணங்களினாலும் அந்த முயற்சி படு தோல்வி அடைந்தது. ஆகவே வேறு வழி இல்லாமல் Anti-கடலை க்ரூப்பில் சேர்ந்து கடலை மன்னர்களை கலாய்க்க ஆரம்பித்தேன்.அப்போதுதான் ஒரு உண்மை புரிந்தது, அந்த Anti-கடலை க்ரூப்பில் இருந்த அனைவரும் கடலை போடும் முயற்சியில் தோல்வியடைந்த அல்லது முயற்சித்தால் கட்டாயம்  தோல்வி அடையும் வயித்தெரிச்சல் கோஷ்டி என்பது, இப்படியாக கல்லூரியில் அந்த புளிய மரத்தடியில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வயித்தெரிச்சலுடன் வளர்ந்து வந்தேன். காதல் வந்த சில நண்பர்களுக்கு கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி உதவினேன். உதாரண உளறல்: 

"புத்தனுக்கு ஞானம் வந்தது போதி மரத்தடியில் - உன்னால்
 எனக்கு காதல் வந்தது புளிய மரத்தடியில்".

கவிதை கொண்டு கொடுத்தவனுக்கு காதல் முறிந்து, ஞானம் பிறந்ததுதான் மிச்சம்.இப்படியாக அந்த ஒரு மரத்தடியில் மகிழ்ச்சி,காதல்,சண்டை,ஏக்கம்,சோகம்,துரோகம் என தமிழ் படத்தில் காண்பிக்கும் அத்தனை உணர்வுகளையும் கண்டேன்.
கல்லூரி விழாக்களுக்கு அந்த மரத்தில் போஸ்டர்  தொங்க விடுவோம், ஹோலி பண்டிகையில் கலர் பொடி தூவுவோம், நியூ இயர்க்கு நடு ராத்திரியில், தண்ணி அடித்த வீர மறவர்கள் அந்த மரத்தின் மேலே ஏறி "Happy New Year.."  என்று காது செவிடாகும் வரை கத்துவார்கள்.  

இறுதியாக காலேஜ் முடியும் போது பிரிவு என்ற உணர்வையும் அந்த மரத்தடியில் அனுபவித்தேன், அந்த அனுபவம் மிகவும் கொடுமையானது. கடைசியாக கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு போகும்போது அந்த மரத்தை பார்த்ததேன், என்னுடைய ஜூனியர் மற்றும் புதிதாக சேர்ந்த மாணவர்கள் 
மாணவிகளுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். புதிய மன்னர்களின் ராஜ்யம் தொடங்கியிருந்தது.  
  
ஆண்டுகள் பல கழிந்தன, இப்போது பனி படர்ந்த மிச்சிகனில் வாழ்க்கை.
சுற்றிலும் Oak, Maple  இன்னும் பல பெயர் தெரியாத மரங்கள். இலையுதிர் காலத்தில் கலர் கலராக நிறம் மாறி மாயா ஜாலம் காட்டும் மரங்கள். 

" என்னங்க.. புதுசா  Trader Joe's-னு ஒரு கடை திறந்திருக்கான், நிறைய Organic fresh items வச்சியிருக்கான்.. கிளம்புங்க.. போலாம்..  எப்ப பார்த்தாலும் laptop-ல எதயாவது நோண்டிகிட்டு.."   

 மனைவி நச்சரிக்க ஆரம்பித்தாள். ஆர்வமில்லாமல் கிளம்பி போனேன். சுற்றி வரும் போது எதேச்சயாக அது கண்ணில் பட்டது, எடுத்து வைத்தேன்

" ஐயைய.. இத எதுக்கு எடுத்து வக்கிறீங்க..? "  மனைவி கேட்க

"இல்ல.. இது வேணும்.. சொன்னா ஒனக்கு புரியாது.."  சொல்லிவிட்டு அதை  எடுத்து வைத்தேன். 

அது Product of Mexico என்று label ஒட்டி அழகாக see through packet -இல் வைக்கப்பட்ட  ஒரு கொத்து ஓட்டு புளியம் பழம்.

இன்னும் பிரிக்கவில்லை .. அப்படியே வைத்திருக்கிறேன். 


நன்றி :  படங்கள் google-லில் பெறப்பட்டவை. 

Tuesday, February 19, 2013

எங்கேயும் எப்போதும் ராஜா - ஒரு டொரோண்டோ இசை பயணம்


"Where are you guys going?" 

 "What's happening there?"

இந்த கேள்வியை பலமுறை இந்த பயணத்தில் எதிர் கொள்ள வேண்டியிருந்தது.நாங்களும் சளைக்காமல் பதிலை சொன்னோம். SUV rent செய்துவிடலாம், பனி,ஐஸ் மழையில் டிரைவ் செய்ய வசதியாக இருக்கும் என்று நண்பர் முரளி ஆலோசனை சொன்னார், அதன்படி அனைத்து விதமான deal மற்றும் discount search-களுக்கு பிறகு Alamo Rental Car கம்பெனியில் SUV rent செய்ய போனோம்.

இடம்: Alamo Rental Car, Grand Rapids, MI.
அங்கிருந்தவர் மேற்சொன்ன இரண்டு கேள்விகளையும் கேட்டார்.

"We are going to Toronto..   "

" Going for music concert.. conducted by famous Indian music composer"
பதிலை சொல்லிவிட்டு அவர் கொடுத்த நீல நிற Nissan Rogue-இல் கனடாவை நோக்கி புறப்பட்டோம்.

இடம்: Port Huron, USA-Canada எல்லை.
கனடா எல்லை பாதுகாப்பு மற்றும் குடியுரிமை அதிகாரி மீண்டும் அதே கேள்வியை கேட்க, அதே பதிலை சொன்னோம்.

"From yesterday I am seeing lot of people going for the concert.. Enjoy your music concert"
என்று சொல்லி பாஸ்போர்ட்டை திருப்பிக் கொடுத்தார். வாங்கிக்கொண்டு டொராண்டோவை நோக்கி 402-401 ஹைவேயில் Nissan Rogue-வை அதிவேகமாய் செலுத்தினோம்.அன்று இரவு தங்க வேண்டிய ஹோட்டலை அடையும் முன் சரவணபவனில் நிறுத்தி சில பல இட்லி, பரோட்டா, தோசை , வடை மற்றும் மெட்ராஸ் காப்பியை முடித்துக்கொண்டோம்.
Grand Rapids நண்பர் சூர்யாவை அங்கு சந்தித்தோம், அவரும் அவசரமாக சில பல இட்லி, தோசைகளை தள்ளிக்கொண்டிருந்தார்

அடுத்த அரை மணி நேரத்தில்..

இடம்: Holiday Inn, Toronto Downtown.
Check In counter-ல் இருந்த சீன பெண் அதே கேள்வியை வேறு விதமாக கேட்டாள்.

"What's happening..so many Indians here today?"
மீண்டும் அதே பதிலை சொன்னோம்.

"உங்களுக்கு 19-தாவது தளத்தில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது, மேலும் நீங்கள் valid customer ஆக இருப்பதால் இது உங்களுக்கு இலவசம்"
என்று சொல்லி அறைக்கான சாவியுடன் குட்டியூண்டு தண்ணீர் bottle ஒன்றை கொடுத்தாள். வாங்கிக்கொண்டு elevator-யை நோக்கி ஓடினோம்.
நிகழ்சி மாலை 5.30 மணிக்கு ஆரம்பம் ஆவதால் சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு கிளம்பினோம். மறக்காமல் இந்த நிகழ்சிக்காக நண்பர் மகேஸ்வரன் design செய்து print செய்திருந்த T-Shirt யை அணிந்து கொண்டு கிளம்பினோம்.

இடம்: In front of Holiday Inn, Toronto Downtown.
எதிரில் வந்த டாக்ஸியை கை காட்டி நிறுத்தினோம். மீண்டும் அதே இரண்டு கேள்விகள் கேட்க்கப்பட்டன.

"Roger Center.. for the music concert.." டாக்ஸி டிரைவர் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னோம்.

"ம்ம்ம்.. Is he that famous? There is heavy traffic jam...So many Indians around the Roger center.." டாக்ஸி டிரைவர் சொன்னார்.

" Yes.. His name is Ilayaraja.. all the crowd came just for that one person.." டாக்ஸி டிரைவருக்கு புரியவைத்தோம்.

இடம்: Roger Center, Blue Jay way, Toronto.
மக்கள் கூட்டம் கூட்டமாக கொட்டும் பனி மழையில் வந்துகொண்டிருந்தார்கள். எந்த பக்கம் பார்த்தாலும் traffic jam. ஒரு வழியாக எங்கள் கேட் எண்ணை கண்டுபிடித்து உள்ளே நுழைந்தோம்.Grand Rapids -இல்  இருந்து முதல் நாளே  வந்து  தங்கியிருந்த எங்களூர்  நண்பர்கள்  பலரை சந்தித்தோம். அவர்கள்  இளையராஜா  தங்கியிருந்த  ஹோட்டலில்  தங்கியிருந்ததாகவும் சித்ரா , கார்த்திக், சினேகா  மற்றும் இளையராஜா  அவர்களை  சந்தித்ததாகவும் சொன்னார்கள் . அவர்களுடன்  எடுத்துக்கொண்ட  புகைப்படத்தையும் காட்டினார்கள் . 
 
இனி இசை நிகழ்ச்சி பற்றிய விமர்சனம், முதலில் நிறைகளை பார்ப்போம்.

நிறைகள்:
  • வித்தியாசமான பாடல் தேர்வுக்கு ஒரு சபாஷ்'..!! ,  "வள்ளி வள்ளி என வந்தான்.." , "போட்டு வச்ச காதல் திட்டம்.." , "ஓரம் போ.. ஓரம் போ" , வாத்திய கருவிகள் இல்லாமல் choir-ல் பாடிய பேயை விரட்டும் பாடல் என பாடல் தேர்வு சிறப்பாக இருந்தது.
  • நாயகனில் வரும் "நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே"  பாடல் அதே படத்தில் இடம்பெற்ற  "தென் பாண்டி சீமையிலே.." பாடலுக்கு மாற்றாக  போடப்பட்ட tune என்ற இளையராஜா சொன்ன போது ஆச்சரயமாக இருந்தது. "நிலா அது வானத்து மேலே.. " tune-னை சோகமா, நெகிழ்ச்சியாக பாடிக் காட்டி அசத்தினார். இதே tune மணிரத்னம் கேட்டுக்கொள்ள பின்னர் குதூகல நடனம் ஆடும் பாட்டாக மாற்றப்பட்டது.
  • நட்சத்திர பாடகர்கள் SPB, சித்ரா,கார்த்தி மற்றும் மது பாலகிருஷ்ணன் மிகவும் சிறப்பாக பாடினார்கள். இந்த நிகழ்ச்சிக்காக அவர்கள் சிரத்தையாக பயிற்சி  செய்திருப்பது தெரிந்தது. குறிப்பாக SPB "மடை திறந்து.."  என்று ஆரம்பித்தவுடன் எங்கோ கொண்டு சென்றுவிட்டார்.
  • ஆர்கெஸ்டிரா மற்றும் choir குழுவினர் மிக மிக சிறப்பாக செய்திருந்தனர். மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள் அவர்கள்..!!
  • பார்திபனால் எல்லோரும் நொந்துபோய் இருக்கும் சமயத்தில் விவேக் மேடை ஏறி மக்களை சிரிக்க வைத்து கலகலப்பை உருவாக்கி நிகழ்ச்சியை அழகாக தொகுத்து வழங்கினார்.
  • வந்திருக்கும் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் செல்லக்கூடாது, நிறைவாக செல்லவேண்டும் என்ற இளையராஜாவின் சிரத்தையும் அவருடைய வழக்கமான கண்டிப்பும் கண்கூடாக தெரிந்தது.
  • இளையராஜா நாடு விட்டு நாடு வந்து வாழும் உங்களையும் என்னையும் இணைப்பது இந்த இசைதான் என்று பொருள்படும் விதமாக "தென் பாண்டி சீமையிலே.." tune-இல் பாடியபோது நிறைய பேருடைய கண்ணில் கண்ணீர் வழிந்தோடியதை காணமுடிந்தது.

ஒரு பிரமாண்டமான நிகழ்சியை எந்த விதமான குற்றம் குறை இல்லாமல் நடத்த முடியாது. அது எவ்வளவு கடினமான காரியம் என்பது தெரியும். இருந்தாலும் குறைகளை ஒரு பார்வையாளன் என்ற முறையில் சொன்னால்தான் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு அவர்கள் எங்கு சொதப்பினார்கள் என்பது தெரியும். எனவே இப்போது..

குறைகள்:

  • கொட்டாம்பட்டி கோயில் திருவிழாவில் நடக்கும் ஆர்கெஸ்டிரா போல இடை இடையே கனேடியன் அரசியல்வாதிகளை மேடை ஏற்றி பேச வைத்தது நிகழ்ச்சி அமைப்பாளர் Trinity Events செய்த மோசமான செய்கை.
  • நிகழ்சி மாலை 7.00 மணிக்குதான் தொடங்கும் என்றால் பின்னர் எதற்காக மாலை 5.30 என்று ticket-ல்  print செய்கிறீர்கள்? அதன் பின்னர் கோட்டு கோபியயும், நித்யா என்ற பெண்ணையும் வைத்துக்கொண்டு 7.00 மணி வரை என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதிங்கி நின்றதுதான் மிச்சம். இதுவும் Trinity Events-ன் சொதப்பல்.
  • கிட்டத்தட்ட சுமார் $400  ( டிக்கெட் $150 + ஹோட்டல் தங்குமிடம் + கார் வாடகை  + பெட்ரோல் + சாப்பாடு ) செலவு செய்து வந்தால் ஒரு துறு பிடித்த மடக்கு இரும்பு நாற்காலியில் நான்கு மணி நேரம் உட்கார்ந்து பார்க்க வைத்து விட்டீர்கள். இன்னும் சில பேர் இந்த நிகழ்ச்சிக்காக விமானத்தில் பறந்து வந்திருந்தனர். வந்திருந்த அனைவரும் கால் நீட்ட முடியாமலும், இடுப்பை நெளித்துக் கொண்டும்தான் பார்த்து முடித்தோம்.  Again Trinity Events-ன் சொதப்பல். 
  • Mr.பார்த்திபன் உங்களை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கச் சொன்ன அந்த அறிவாளி யார்? உங்களுக்கு ஒரு விஷயம் சரியாக வரவில்லை என்றால் அதிலிருந்து ஒதிங்கிவிடுங்கள், எங்களை கொல்லாதீர்கள் ..!! At least கொஞ்சமாவது practice செய்துகொண்டு மேடை ஏறுங்கள். 
  • சினேகா, பிரசன்னா எதற்கு வந்தார்கள் என்றே தெரியவில்லை. இந்த நிகழ்ச்சி நடக்கும் போதுதான் மேடையில் இளையராஜா காலில் விழுந்து அவர்கள் கல்யாணத்திற்கு ஆசி வாங்கினார்கள். அவர் என்ன "இயேசு அழைக்கிறார் .." நிகழ்ச்சியா நடத்துகிறார்? 
  • Mr.ஹரிஹரன், எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஹே ராமில் வரும் "நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி.." அதை நீங்கள் இப்படி சொதப்புவீர்கள் என நினைக்கவில்லை. உங்களிடம் பேச வரும் ரசிகர்களிடம் ஏன் நீங்கள் ஏதோ வானத்தில் இருந்து குதித்த தேவதூதன் போல நடந்து கொள்கிறீர்கள்? சாதாரணமாக  பேசலாமே?

இரவு 11.30 மணிக்கு இளையராஜாவுக்கு கனடா நாட்டின் இளம் தமிழ் பெண் MP ராதிகா சிற்சபை ஈசன் கனடா நாட்டின் கொடியை போர்த்தி முதல் மரியாதை செய்த நிகழ்வோடு நிகழ்ச்சி நிறைவடைந்தது. மறுநாள் காலை USA-வை நோக்கி  Nissan Rogue 401-ஹைவேயில் பயணித்தது, iPod இல் இருந்து " ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளதை மீட்டுது.." இசை கசிந்துகொண்டிருந்தது. இரண்டு நாள் நெருக்கமான உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு சென்று திரும்பும் மனநிலையில் அமைதியாய் பயணித்துக்கொண்டிருந்தோம்..

Monday, October 1, 2012

காந்திக்கு நோபெல் பரிசு மறுக்கப்பட்டது ஏன்?

      இந்தப் பதிவை நான் எழுதும் நாள் 2012 அக்டோபர் 2, அண்ணல் காந்தி அவர்களின் பிறந்த நாள். அகிம்சை என்ற ஒரே ஆயுதத்தை கொண்டு இங்கிலாந்திடம் இருந்து இந்தியாவுக்கு ( பாகிஸ்தான், பங்களாதேஷயும் சேர்த்துதான்) சுதந்திரம் வாங்கி தந்தவரின் நன்நாள். இரண்டாம் உலகப் போரில் கோடிக்கணக்கான மக்கள் ஜப்பானிலும், ஐரோப்பியாவிலும் செத்து மடிந்த தருணத்தில் அமைதியான முறையில்ஆயுதம் இன்றி போராடியவர். அப்படிப்பட்ட அந்த மகானுக்கு இன்றுவரை அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஆச்சரியம்தான்..!!! ஆனால் உண்மை.!!!


இதுவரை ஐந்து முறை 1937, 1938, 1939, 1947 மற்றும் 1948 ஆம் ஆண்டுகளில்  காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டு கடைசியில் கிடைக்கமால் போனதுதான் மிச்சம். காந்தியின் மீது மதிப்பும் மரியாதையும் கொண்ட அமெரிக்கா மற்றும் ஐரோப்பியாவில் வாழ்ந்த மக்கள் 1930 ஆம் ஆண்டு “இந்தியாவின் நண்பர்கள்” என்ற அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்பை சேர்ந்தவர்களின் முயற்சியால் 1937 ஆம் ஆண்டு முதல் முறையாக காந்தியின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு நார்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர் Ole Colbjørnsen என்பவரால் பரிந்துரைக்கப்படுகிறது. மொத்தம் 13 பெயர்கள் காந்தியுடன் சேர்த்து இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது. நோபல் கமிட்டி Professor Jacob Worm-Müller என்பவரை காந்தியை பற்றிய விரிவான அறிக்கை தரும்படி கேட்டுக்கொள்கிறது. அவர் தன்னுடைய அறிக்கையில் காந்தியின் அகிம்சை மற்றும் அவருடைய கோட்பாடுகளை பாராட்டிய அதே நேரத்தில் கீழ் கண்ட இரண்டு விஷயங்களை காந்திக்கு பாதகமாக தெரிவிக்கிறார். இது 1937 ஆம் ஆண்டு எழுதப்பட்ட அறிக்கை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

1)       காந்தி இந்தியாவிலும், தென் ஆப்ரிக்காவிலும் அநீதிக்கு எதிராக போராடியிருந்தாலும் அந்த போராட்டம் இந்தியர்களுக்காக மட்டுமே இருந்தது. தென் ஆப்ரிக்காவில் அவர் இந்தியர்களுக்காக போராடிய அதே நேரத்தில் கருப்பின மக்கள் அடிமைகளாகவும் இந்தியர்களைவிட இன்னும் மோசமான நிலையிலும் இருந்தனர். காந்தி அவர்களுக்காக எந்தவிதமான தீவிர போராட்டத்திலும் ஈடுபடவில்லை. எனவே இவரை ஒரு உலக அளவிலான போராட்ட தலைவராக கருதமுடியாது, ஒரு தேசிய அளவிலான தலைவராக மட்டுமே கருத முடியும்.

2)       காந்தி அகிம்சை போராட்டத்தை தம் மக்களுக்கு வழி காட்டிய போதிலும் அவருடைய தொண்டர்கள் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள சவுரி சாரா என்ற ஊரில் ஒரு காவல் நிலையத்தை காவல் அதிகாரிகளை உள்ளே வைத்து எரித்து கொன்றனர் (இந்த சம்பவம் காந்தி திரைப்படத்திலும் காட்டப்படும்).   

மேற் சொன்ன இரண்டு காரணங்களினால் அந்த ஆண்டு காந்தியின் பெயர் நிராகரிக்கப்பட்டு Lord Robert Cecil என்ற இங்கிலாந்து நாட்டவருக்கு வழங்கப்படுகிறது. Ole  Colbjørnsen மீண்டும் 1938 மற்றும்1939 ஆண்டுகளில் மறுபடியும் காந்தியின் பெயரை பரிந்துரை செய்கின்றார். ஆனால் அப்போதும் வழங்கப்படவில்லை.

அதன் பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு மறுபடியும் காந்தியின் பெயர் பரிந்துரைக்கப்படுகிறது. இம்முறை இந்தியாவிலிருந்து தபால் தந்தி மூலம் பாம்பே முதல் மந்திரி கோவிந்த் பல்லாப் பந்த் மற்றும் சபாநாயகர் மவலாங்கர் நோபல் கமிட்டிக்கு காந்தியின் பெயரை பரிந்துரைக்கின்றனர். வழக்கம் போல நோபல் கமிட்டி காந்தியை பற்றிய அறிக்கை தரும்படி இம்முறை வரலாற்று பேராசிரியர் Jens Arup Seip என்பவரை கேட்டுக்கொள்கிறது. அப்போதுதான் இந்தியா சுதந்திரம் பெற்று பாகிஸ்தான் பிரிந்து பிரிவினையின் போது ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்தும் அகதிகளாக துரத்தப்பட்டும் துயர சம்பவங்கள் நடந்தேறின. இதை பேராசிரியர் Jens Arup Seip தன் அறிக்கையில் குறிப்பிட்டு காந்தியால் அல்லது காந்தியின் தொண்டர்களால் இதை தடுக்க இயலாமல் போய்விட்டது என்று குறிப்பிடுகிறார்.

அந்த ஆண்டு இறுதி பட்டியலுக்கு வந்த 6 பெயர்களில் நோபல் கமிட்டியில் இருந்த அனைவரும் காந்தியின் பெயரை தேர்வு செய்ய, Martin Tranmæl மற்றும் Birger Braadland என்ற இரண்டு பேரும் நிராகரித்து விட்டனர். அவர்கள் சொன்ன காரணம்: இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை கலகத்தால் நேர்ந்த உயிர் இழப்பு தடுக்கப்பட்டிருக்கலாம், மேலும் இப்போது காந்திக்கு இந்த விருதை கொடுத்தால் அது இந்தியா-பாகிஸ்தான் உறவை இன்னும் சீர்குலைக்கும். ஆக 1947-லிலும் நோபல் பரிசு காந்திக்கு நிராகரிக்கப்பட்டு American Friends Service Committee என்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டே 1948-ல் மீண்டும் காந்தியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டு இறுதி பட்டியலுக்கு தெரிவுசெய்யப்படுகிறது. இம்முறை காந்தியுடன் சேர்த்து மொத்தமே மூன்று பெயர்கள்தான் உள்ளன. இம்முறையும் பேராசிரியர் Jens Arup Seip காந்தி பற்றிய அறிக்கையை நோபல் கமிட்டியிடம் சமர்பிக்கின்றார். ஒருமனதாக அனைவரும் காந்தியின் பெயரை அமைதிக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்கின்றனர். அதிகார பூர்வமான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கவுள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு அதாவது 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்படுகின்றார்.நோபல் கமிட்டின் சட்ட விதிகளின் படி இறந்து போனவருக்கு வழங்க முடியாது. கீழ் கண்ட சட்ட விதிகளின் படி இறந்து போனவருக்கு நோபல் கமிட்டி வழங்க முடியும்,

1)     இறந்து போனவர் தன் வாரிசை சட்டப்படி உயில் எழுதி தெரிவித்து இருந்தால் அவர் வாரிசுக்கு வழங்கப்படும்.
2)     இறந்து போனவர் ஏதாவது கட்சியின் அல்லது நிறுவனத்தின் தலைவராக இருந்தால் அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படும்.

ஆனால் காந்தி உயிலும் எழுதி வைக்கவில்லை, எந்த கட்சியோ அல்லது நிறுவனத்தின் தலைவராகவோ அந்த சமயத்தில் இல்லை. இறுதியாக நோபல் கமிட்டி அந்த வருடம் அமைதிக்கான நோபல் பரிசை யாருக்கும் வழங்கவில்லை.

(தகவல்  ஆதாரம் : http://www.nobelprize.org)

Friday, June 1, 2012

இளையராஜாவின் ரசிகன்


இந்த உலகில் பல வகையான ரசிகர்கள், இசை ரசிகர், கிரிக்கெட் ரசிகர், சினிமா ரசிகர், உணவு ரசிகர் இப்படி பல வகை. அனைவருமே ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒன்றுக்கு ரசிகராக இருந்திருப்போம், பின் மாறி இருப்போம் அல்லது இன்னும் ரசிகராக இருப்போம். சில சந்தர்ப்பங்களில் ஒருவர் எதற்கு ரசிகராக இருக்கிறாரோ அதை வைத்து அவருடைய ரசனையை எடை போடுகிறோம். உதாரணமாக நடிகர் விஜயகாந்த், ராமராஜன் ரசிகர் என்றால் ஒரு விதமாகவும், உண்மையிலேயே பிடிக்கவில்லை என்றாலும் வெளியில் டைரக்டர் மணிரத்தினம் ரசிகர் என்று சொல்பவரை வேறு விதமாகவும் நினைக்கிறோம்.ஆனால் இந்த “ரசிகன்” என்ற வார்த்தையில் அதன் ஆழம் தெளிவாக தெரிவதில்லை. தீவிர ரசிகன், வெறியன், உயிர் ரசிகன் போன்ற வார்த்தைகள் மூலம்தான் எவ்வளவு தீவிரமான, ஆழமான ரசிகன் என்பதை தெளிவுபடுத்த முடியும்.

  அப்போது சேலத்திற்கு அருகில் இருக்கும் தொளசம்பட்டி என்ற கிராமத்தில் இருந்தோம். மாலை சுமார் 6.30 மணி, ஒரு தாய் தன் இடுப்பில் கை குழந்தையை சுமந்து கொண்டு வேர்க்க விருவிருக்க ஓடிகொண்டிருக்கிறார், அவருடன் சேர்ந்து இன்னும் இரண்டு பெண்கள் வேகமா ஓடுகிறார்கள். அந்த குழந்தைக்கு உடம்பு ஏதும் சரியில்லையா? ஏதும் ஆபத்தா? என்ன அவசரம்? ஒன்றும் புரியவில்லை, பின்னர் தெரிந்தது “நாளை நமதே” எம்ஜியார் படத்தை பார்க்க டூரிங் டாக்கீஸ்க்கு ஓடினார்கள் என்பது. எம்ஜியாருக்கு இருந்த ரத்தத்தின் ரத்தங்களுடைய நடவடிக்கையோடு ஒப்பிடும் போது இது ஒன்றும் பெரிதல்ல, ஆனால் நான் பார்த்து வியந்த முதல் நிகழ்ச்சி அது.

  அமெரிக்கா வந்த பின்பு சம்பரதாயமாக எல்லோரையும் போல் நியூ யார்க்கில் சுதந்திர தேவி சிலையை (Statue Of Liberty) பார்க்க கப்பலில் போய் கொண்டிருந்தேன். அந்த கப்பல் முழுவதும் வெவ்வேறு நாடுகளில் இருந்து வந்த பயணிகள் கையில் கேமராவுடன் அலைந்து கொண்டிருந்தார்கள். நம்மூர் அரசியல்வாதி ஒருவர் தூய கதர் ஆடையில் அவருடைய அடி பொடிகள் ஐந்து ஆறு பேருடன் பந்தாவாக அலைந்து கொண்டிருந்தார். வழக்கம்போல நிறைய சீனா டூரிஸ்ட்கள் சிங்-சாங்-சூங் என்று பேசிக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் ஒருவர் ஜப்பானோ, கொரியாவோ தெரியவில்லை தன் girl friend -யை வித விதமாக Nikon-ல் சுட்டுக்கொண்டிருந்தார்.என்னை பார்த்தவர் நேராக என்னிடம் வந்து “ஹாய்” சொன்னார்.

“நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?” என்றார்
“ஆம்” என்றேன்
“இந்தியாவில் எந்த பகுதியில் இருந்து வருகிறீர்கள்? என்றார்
“தென் இந்தியா, சென்னை அருகில்.. “ என்றேன்
 “நான் dancing king-ன் hard core fan”  என்றார்.
“dancing king..??? “ என்று இழுத்தேன்.
“Mr.ரஜினிகாந்த்” என்றார், சொல்லிவிட்டு அவரே தொடர்ந்தார்
“அவருடைய படத்தை பார்த்த பிறகு தீவிர ரசிகர்களாகிவிட்டோம் , Mr.ரஜினிகாந்தை நேராக பார்க்கவேண்டும் என்று எனக்கும் என் girl friend -க்கும் மிகவும் ஆசை, ஜப்பானில் இருந்து கிளம்பி நேராக சென்னை வந்தோம், கோடம்பாக்கம் சென்று பார்த்தோம், ஆனால் அப்போது Mr.ரஜினிகாந்த் ஊரில் இல்லை, அதனால் பார்க்க முடியவில்லை. முத்து படத்தில் bad characheter செய்த நடிகரை (பொன்னம்பலம்) பார்க்க முடிந்தது. அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டோம்” என்று சொல்லிவிட்டு அவரும், அவருடைய girl friend என்னுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டார்கள். எனக்கு அன்று Statue Of Liberty யை விட அவர்கள் அதிசயமாக தெரிந்தார்கள்.


இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் ஆபீஸ் விஷயமாக ஜெர்மனியின் ஸ்டுட்கர்ட் நகரில் இருந்தேன். அன்று மதியம் வேக வேகமாக எல்லோரும் வேலையை முடித்துவிட்டு அந்த பெரிய conference hall-ல் கூடினார்கள். இஷ்டம் போலஅனைவருக்கும் பீர் வழங்கப்பட்டது. பெரிய டிவியில் ஜெர்மனியும்  கானாவும் (Ghana)  விளையாடும் கால் பந்தாட்டம் தொடங்கியது. விறுவிறுப்பான ஆட்டத்தின் இறுதியில் ஜெர்மனி வென்றது. வெளியே வந்தால் ஒரே கூச்சல், சப்தம், ஆரவாரம். எங்கு பார்த்தாலும் போலீஸ், எல்லா கார்களிலும் ஜெர்மனி கொடி பறக்க ரசிகர்கள் ஹான்க் செய்து கொண்டு பறந்தார்கள். இத்தனைக்கும் அது உலக கோப்பைக்கான Semi Final-தான். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்துதான் என்னுடைய ஹோட்டலுக்கு வர முடிந்தது. முதன் முதலாக தீவிரமான, உணர்ச்சிமயமான, பெரும் திரளான ரசிகர்களை அன்று பார்த்தேன்.

  Grand Rapids-ல் வசிக்க தொடங்கிய பிறகு அவரை பொதுவான பல party- களில் பார்த்திருக்கிறேன். மிகவும் நேர்த்தியாக உடை அணிந்திருப்பார், மிகவும் அமைதியாக நிதானமாக பேசுவார். புதிதாக வந்திருக்கும் அனைத்து Electronic Gadgets பற்றி தெரிந்து வைத்திருப்பார். Music Systems, Audio Speakers, iPad பற்றிய ஆலோசனைகளை நண்பர்கள் அவரிடம் கேட்டு தெரிந்து கொள்வார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எனக்கும் நெருங்கிய நண்பரானார். ஒரு நாள் வீட்டுக்கு அழைத்தார், சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். வாருங்கள் basement-க்கு போலாம் என்று கூப்பிட்டார். அவருடன் சென்றேன், கீழே studio போல ஒரு ரூம் கட்டியிருக்கிறார். கதவை திறந்து உள்ளே சென்றவுடன் கண்ணில் முதலில் படுவது மிகவும் அழகாக silhouette-ல் frame செய்யப்பட்ட இளையராஜாவின் படம். விதவிதமான Audio Speakers மற்றும் equipment கள்.நான் ஆச்சர்யமாக பார்க்க,
 “ஒரு பாட்டு போடுகிறேன்.. கேளுங்கள், படம் பேரு பட்டா கத்தி பைரவன்” என்றார்.
பட்டா கத்தி பைரவனா? பேரே ஒரு மாதிரி பயமா இருக்கே, என்ன ரசனையோ என்று மனதில் நினைத்துக் கொண்டு
“ஓகே.. கேட்போம்..” என்றேன்.Play பட்டனை அமுக்கினார்,
“எங்கெங்கே செல்லும் என் எண்ணங்கள்..”  SPB யும், ஜானகியும் பாட ஆரம்பித்தார்கள்.
வாவ்..!!! அதை சொல்ல, அந்த அனுபவத்தை விபரிக்க வார்த்தை இல்லை. இந்த பாட்டை இதற்கு முன் கேட்டிருக்கிறேன், ஆனால் அவருடைய அந்த ஆடியோ சிஸ்டத்தில் கேட்கும் சுகமே தனி. ஒரு அதி தீவிரமான இளையராஜாவின் ரசிகரை அன்று கண்டுகொண்டேன். இளையராஜா இசை அமைத்து இன்னும் வெளி வராத படங்களை தவிர அனைத்து படங்களின் ஒரிஜினல் இசை தட்டுக்களும் அவரிடம் உள்ளன. இளையராஜா இசை அமைத்திருந்தால் மட்டுமே அவருடைய ஆடியோ சிஸ்டத்தில் இசைக்கப்படும், இல்லாவிட்டால் அனுமதி கிடையாது. சலங்கை ஒலி, அலைகள் ஓய்வதில்லை, பிரியா, தங்க மகன், How To Name It, நந்தலாலா BGM, நான் கடவுள் என்று தொடர்ந்து பல மணி நேரம் ராஜாவின் இசை ராஜாங்கத்தை நடத்தி காண்பித்தார். அந்த இசை மழையில் நனைந்து, மூழ்கி திளைத்து கடைசியாக வீடு திரும்பும் போது நானும் ஒரு தீவிர இளையராஜா ரசிகனா மாறியிருந்தேன்..!!

Saturday, May 26, 2012

AIR INDIA: ஒரு காமெடி நிறுவனம்.


"எம் புருஷனும் கச்சேரிக்கு போறான்" என்ற பழ மொழிக்கு உதாரணமாக இந்திய அரசு நடத்தி வரும் பல நிறுவனங்களில் முதலிடம் வகிப்பது Air India.கடந்த இருபது நாட்களாக இந்த நிறுவன pilot-கள் வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள், பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, இதில் இந்தியாவிலிருந்து நியூ யார்க், சிகாகோ, லண்டன் மற்றும் பல வெளிநாடு செல்லும் விமான சேவையும் அடங்கும். இதனால் தினமும் பல கோடி ரூபாய்கள் வருமான இழப்பு மற்றும் ஏகப்பட்ட நஷ்டம். புதிதாக வாங்க உள்ள Dream Liner விமான பயிற்சிக்கு Air India வை சேர்ந்த பைலெட்களுக்குதான் முன்னுரிமை தரவேண்டும், merge செய்யப்பட்ட Indian நிறுவன பைலெட்களுக்கு அல்ல என்பதுதான் பிரச்சனை.

இந்த பிரச்சனைகளை எல்லாம் ஒதிக்கி வைத்து விட்டு, முதலில் அடிப்படை விஷயத்திற்கு வருவோம்.எத்தனையோ கோடி மக்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழும் இந்தியாவில் Rs.42,570 கோடி ரூபாய் கடனிலும், Rs. 22,000 கோடி ரூபாய் நஷ்டத்திலும் ( கடந்த மூன்று ஆண்டுகளில் அடிப்படை சுகாதார வசதிகளுக்கு செலவழித்ததை விட இரு மடங்கு தொகை இது..!!!)
இந்த நிறுவனத்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன? நம் மனதில் எழும் கேள்விகள் இவைதான்,

1.வேறு தனியார் யாருமே நடத்த விரும்பாமல், தயாராக இல்லாமல் இந்த நிறுவனத்தை அரசு நடத்துகிறதா?
2.அனைத்து மக்களுக்கும் அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற தண்ணீர், மின்சாரம், கல்வி,மருத்துவம் போல இதுவும் அத்தியாவசியமான ஒன்றா?
3.ISRO (Indain Space Research Organisation) போல செலவு பிடிக்கும் அதே சமயம் ரகசியங்கள் நிறைந்த துறையா?
4.கோடானு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் எத்தனை பேருக்கு இதனால் பயன்?

இதைப் பற்றி எதையும் யோசிக்காமல் மக்கள் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்ய எப்படி முடிகிறது? இதற்கு தனியாக மத்திய அரசில் ஒரு துறை, அதற்கு ஒரு அமைச்சர், அந்த துறையில் பல ஆயிரம் பேருக்கு வேலை, கடைசியில் ஒவ்வொரு வருஷமும் பல கோடி நஷ்டக் கணக்கு.

இன்றைய உலக பொருளாதார நிலையில், பெட்ரோல் விலை தாறு மாறாக எகிறும் சூழ்நிலையில், மிகவும் கடினமான போட்டி நிறைந்த Air Line Travel தொழிலில்,அதுவும் சிங்கபூர் Air Lines போன்ற ஜாம்பவான்களே தடுமாறும்போது இந்திய அரசு தொடர்ந்து இந்த நிறுவனத்தை நடத்துவதை பார்க்கும் போது அழுவதா? சிரிப்பதா? என்று தெரியவில்லை.
இந்தியாவிலிருந்து வெளிநாடு சென்று வரும் பயணிகளில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் IT மற்றும் அதை சார்ந்த தொழில் செய்பவர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. இவர்கள் அதிகம் வாழும் நகரங்கள் என்றால் பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத். இன்று வரை இந்த நகரங்களில் இருந்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடி விமான சேவை Air India-வால் இயக்கப் படுவதில்லை. மும்பை அல்லது நியூ டெல்லி சென்று அங்கு பல மணி நேரம் காத்திருந்து வேறு விமானம் பிடிக்க வேண்டும். அதே சமயம் Air France, Lufthansa , British Airways போன்றவை இந்த நகரங்களில் இருந்து நேரடி விமான சேவையை செய்கின்றன.

ஆகஸ்ட் 2011-ல் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஒரு சட்டம் இயற்றியது, அதன்படி அமெரிக்காவுக்கு வந்து செல்லும் விமானங்களின் நேர விபரம், தாமதமானால் அதன் விபரம், டிக்கெட் வரி விபரம், பயணிகள் எத்தனை பெட்டிகள் எடுத்து வரலாம், அதன் எடை, நீள அகலம போன்ற விபரங்களை பயணிகளுக்கு மிக தெளிவாக அந்தந்த விமான நிறுவனத்தின் Web Site-ல் தெரிவிக்கப்பட்டிருக்கவேண்டும், தவறினால் $80,000 அபராதம் விதிக்கப்படும். இந்த சட்டத்தின் கீழ் 2012 மே மாதம் 5 ஆம் தேதி $80,000 (Rs. 43,20,000) அபராதம் விதிக்கப்பட்ட ஒரே ஒரு விமான நிறுவனம் Air India மட்டுமே. அதுவும் திடீரென அபராதம் விதிக்கப்படவில்லை, சில பல warrnings கொடுத்து அதை சற்றும் சட்டை செய்யாமல் இருந்த பின்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பணம் எங்கிருந்து வரப்போகிறது? இந்திய மக்களின் வரிப் பணத்தில் இருந்துதானே?

சரி என்ன செய்வது.. சூப்பர் ஸ்டார் டயலாக்கை சொல்லி முடிக்க வேண்டியதுதான்

"ஆண்டவனே வந்தாலும் Air India வை காப்பாத்த முடியாது..!!!"

Sunday, May 13, 2012

அன்னக்கிளியும் ஸ்வர்ணாம்பிகையும்


அன்னக்கிளி என்றவுடன் எல்லோருக்கும் ஞாபகம் வருவது இசைஞானி இளையராஜாவின் முதல் படம் என்பதுதான், ஆனால் 1975 -1985 களில் தொளசம்பட்டியில் வாழ்ந்த மக்களுக்கு ஞாபகம் வருவது
ஸ்வர்ணாம்பிகைதான்.சேலத்திலிருந்து மேட்டூர் செல்லும் பிரதான சாலையில், ஓமலூர் தாண்டியதும் கொஞ்ச தூரத்தில் உள் பிரிந்து செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தூரம் சென்றால் வரும் ஊர்தான் தொளசம்பட்டி.
கிட்டத்தட்ட பாரதிராஜாவின் படங்களில் வருவதுபோல அழகான ரயில்வே ஸ்டேஷன், புளிய மரங்கள் அடர்ந்த நிழலில் ஞாயிற்று கிழமை கூடும் சந்தை, ஊர் நடுவே ஒரு பெருமாள் கோயில், அதைச் சுற்றி சின்ன சின்னதெருக்கள். தினம் ஐந்து முறை சேலத்திலிருந்து வந்து போகும் ரத்னா சினிமா ஸ்டுடியோக்காரருக்கு சொந்தமான ஸ்வர்ணாம்பிகை என்ற ஒரே ஒரு பஸ். என்னதான் "ஸ்வர்ணாம்பிகை" என்று கொட்டை எழுத்தில் எழுதியிருந்தாலும் தொளசம்பட்டி மக்கள் வைத்த பெயர் "நம்மூரு வண்டி".

பச்சையும் வெள்ளையும் பட்டை பட்டையாக அடிக்கப்பட்ட அந்த நம்மூரு வண்டிதான் கைத்தறி நெசவாளர்கள் நெய்த புடவையை விற்க ஈரோடு, சேலம் செல்வதற்கும், பள்ளிக்கூட வாத்தியார்கள் வெளியூரிலிருந்து வந்து போவதற்கும், கல்யாண பண்டிகை நாட்களில் சொந்த பந்தங்கள் வந்து போவதற்கும் உதவியாக இருந்தது. ஸ்வர்ணாம்பிகை இரவு 8 மணிக்கு கடைசி ட்ரிப் சேலத்திலிருந்து வந்தால் மறுநாள் காலை 4.30 மணிக்குத்தான் முதல் ட்ரிப் சேலம் கிளம்பும். வேலை விஷயமாக சேலம் டவுனுக்கு போய்விட்டு திரும்பும்போது பஸ் ஸ்டாண்டில் நிறைய ATC (அன்றைய Anna Transport Corp.) பஸ்களுக்கு நடுவில் ஸ்வர்ணாம்பிகையை பார்த்தவுடன் சொந்த வீட்டுக்கே வந்தது போல சந்தோசம் வரும். மணி இப்ப என்ன? என்று கேட்டால் தொளசம்பட்டியில் நிறைய பேர் நம்மூரு வண்டி போயி கால் மணி ஆவுது என்பார்கள், நாம்தான் யூகித்துக் கொள்ளவேண்டும்.இப்படி அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாகிவிட்ட குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகிவிட்ட ஸ்வர்ணாம்பிகையை பற்றி ஒரு நாள் அந்த செய்தி காட்டுத் தீ போல பரவியது.

அம்பாயிர முதலியார் எப்பொதும் சாயங்காலம் போல எங்கள் வீட்டுப் பக்கம் வந்து கொஞ்ச நேரம் பழங் கதைகளை பேசிவிட்டு போவார். அவர் மேட்டூர் அணை கட்ட வெள்ளைக்காரன் கிட்ட கூலி வேலை பார்த்தது,காமராஜர் மாட்டு வண்டியில வந்து சுதந்திர பிரச்சாரம் செய்தது என்று அவருடைய சின்ன வயதில் நடந்த விஷயங்களை சொல்வார். அவர்தான் முதன் முதலில் அந்த செய்தியை எங்களுக்கு சொன்னார்.

"தெரியுமா சேதி? புதுசா ஒரு படம் வந்திருக்குதே அன்னக்கிளின்னு, சேலத்துல ஓரியண்டல் கொட்டாயில ஓடுதாம்..!! பாட்டெல்லாம் நல்லாயிருக்குது, ரேடியோ பொட்டியில அந்த படத்து பாட்டயேதான் போடறான்..அந்த படத்துல நம்மூரு வண்டியும் நடிச்சு இருக்குதாம்..ரத்னா ஸ்டுடியோலதான் படமே எடுத்தாங்களாம், அவங்க பஸ்தான நம்மூரு வண்டியும், அதுவும் 2 , 3 சீன்ல வருதாம்..!!"

இதை கேள்விப்பட்ட பலபேரும் அன்னக்கிளியில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்க்க சேலத்திற்கு அதே ஸ்வர்ணாம்பிகையில் சென்றோம். படம் ஆரம்பித்த உடனே "நன்றி ரத்னா ஸ்டுடியோ" என்று காண்பித்தார்கள்.எங்களுக்கு நம்பிக்கை வந்தது ஸ்வர்ணாம்பிகையை பார்த்து விடுவோம் என்று. படம் தொடர்ந்து ஓடியது. அம்பாயிர முதலியார் சொன்னது நிஜம்தான், முதன் முதலில் ஊருக்கு வரும் சிவக்குமார் பொட்டியுடன் ஸ்வர்ணாம்பிகை பஸ்ஸில் இருந்து இறங்குவார். படம் பார்த்த எல்லோரும் திருப்தியுடன் ஊர் திரும்பினோம்.பள்ளிக் கூடத்தில் அன்னக்கிளி படம் பார்த்ததும் அதில் வரும் ஸ்வர்ணாம்பிகையை பார்த்ததும் பசங்களிடம் ஒரே பேச்சாக இருந்தது.

சில வருடங்களில் PNR,NT,ABT என்று தனியார் பஸ்கள் தொளசம்பட்டி வழியாக சேலத்திற்கும் மேட்டூருக்கு இடையே போக ஆரம்பித்தன என்றாலும் நம்மூரு வண்டி மீதான பாசம் மக்களுக்கு குறையவில்லை.
அதன்பின் ஒருநாள் தொளசம்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் ஒரே கூட்டம், கிட்டத்தட்ட ஊர் மக்கள் அனைவரும் அங்குதான் இருந்தார்கள்.எல்லோரும் எதையோ எதிர்பார்த்து காத்திருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் சிகப்பு கலரில்
வாழை மரமெல்லாம் கட்டி சந்தனமெல்லாம் தெளித்து ஒரு புத்தம் புது பஸ் சர்ர் என்று வந்து நின்றது. அதன் போர்டில் "S2 - சேலம் ஜங்ஷன்" என்றும், பஸ்ஸின் சைடில் "அண்ணா போக்குவரத்து கழகம்" என்றும் எழுதி இருந்தது.

"இதாம்பா டவுன் பஸ்ஸாம்..!!"

'நம்மூரு வண்டியவிட சார்ஜ் கம்மியாம்.."

"எம்ஜியாரு இந்த வண்டிய உட சொன்னாராம்.."

"இரும்பால வழியா சீக்கரம் போயிடுமாம்"

என்று மக்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொண்டார்கள். அந்த பஸ் டிரைவர்க்கும் கண்டக்டர்க்கும் ராஜா மரியாதை கிடைத்தது.எல்லோரும் S2 வில் போக துடித்தார்கள். இன்னும் சில வருடங்களில் நிறைய தனியார் பஸ்களும், அரசு டவுன் பஸ்களும் விடப்பட்டன.ஸ்வர்ணாம்பிகை ஐந்து ட்ரிப்பில் இருந்து மூன்றாக குறைத்துக்கொண்டது. அதன் பெயரும் ஸ்வர்ணாம்பிகையிலிருந்து ரத்னகுமார் என்று மாறியது. ஆனாலும் அதை எல்லோரும் நம்மூரு வண்டி என்றே அழைத்தார்கள். ஒரு நாள் வழக்கம் போலஅம்பாயிர முதலியாரே அந்த செய்தியை சொன்னார்

"வர்ற ஞாயித்து கிழமையோட நம்மூரு வண்டிய நிறுத்தபோறாங்களாம். இன்னம தொளசம்பட்டிக்கு வராதாம், பொட்டிக்கட மாணிக்கம், சிவலிங்கம் இன்னு எல்லாரும் சேந்து ஊர் பொது மக்கள் கிட்ட கையெழுத்து வாங்கி
கலெக்டர்க்கு மனு அனுப்ப போறாங்களாம். ஊருக்கு மொத மொத வந்த வண்டிய நிறுத்த கூடாது அப்படின்னு கேட்டுக போறாங்களாம்.." என்றார்.

அந்த ஞாயித்து கிழமையும் வந்தது, நம்மூரு வண்டி மாலை 4.30 மணிக்கு தனது கடைசி பயணத்தை சேலத்திற்கு தொடங்கியது. எல்லோரும் ஓடிப்போய் கண்ணிலிருந்து மறையும்வரை பார்த்தோம்.அதன் பின் நான் ஸ்வர்ணாம்பிகையை பார்க்கவேயில்லை, கொஞ்ச கொஞ்சமாக எல்லோரும் அதை மறந்து போனார்கள்.

நேற்று எதேச்சியாக You Tube-ல் அன்னக்கிளி பாட்டு பார்த்தேன், அதில் ஸ்வர்ணாம்பிகையும் வந்தது. ரொம்ப நாள் கழித்து அதை மீண்டும் பார்கிறேன்..!!

Sunday, April 15, 2012

ஷாருக்கானும் -இராமேஸ்வரம் மீனவனும்

நாம் இப்போது ஷாருக்கானுக்கும் -இராமேஸ்வரம் மீனவனுக்கும் ஒரு ஒப்பீடு செய்யப்போகிறோம், அதாவது ஒற்றுமை வேற்றுமைகளை காணப்  போகின்றோம். இது என்ன முழங்காலுக்கும் மொட்டத்தலைக்கும் முடிச்சி? என்று நீங்கள் நினைக்கலாம், தொடர்ந்து படித்தால் புரியும்..


 ஷாருக்கான்:
இவர் ஒரு இந்திய குடிமகன். பிரபலமான திரைப்பட நடிகர், செல்வந்தர்.
இவர் நேற்று தனி விமானத்தில் இந்தியாவிலிருந்து நியூ யார்க் அருகில் உள்ள White Field விமான நிலையத்திற்கு வந்து இறங்குகிறார், அவரை குடியுரிமை அதிகாரிகள் சுமார் இரண்டு மணி நேரம் காக்க வைத்து விசாரணை செய்கிறார்கள், இறுதியில் அமெரிக்காவினுள் அனுமதிக்கப்படுகிறார். இதே போல அவருக்கு முன்னொரு முறை 2009 இல் நடந்துள்ளது என்றாலும்ஷாருக்கான் அடிக்கடி அமெரிக்காவிற்கு படபிடிப்பிற்கும் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கும் வந்து போய் கொண்டுதான் இருக்கிறார்.


இந்த விஷயத்தை கேள்விப்பட்ட இந்திய அரசாங்கம் மிகுந்த கவலையும் கோபமும் கொண்டது, ஒரு இந்திய குடிமகனுக்கு நிகழ்ந்த அவமானமாக கருதியது. இந்திய வெளிஉறவு துறை அமைச்சர் கிருஷ்ணா ரஷ்யாவிலிருந்து கடுமையான கண்டனத்தை தெரிவித்தார் , வாஷிங்டன்னிலிருந்து இந்திய தூதர் நிருபமா ராவ் ஒரு படி மேலே சென்று அமெரிக்க அரசாங்கத்தின் விளக்கம் கேட்டு கண்டனத்தை தெரிவித்தார். இறுதில் அமெரிக்க அரசாங்கம் மன்னிப்பு கோரியது.அதை ஏற்றுகொண்ட இந்திய அரசு இது போல இனிமேல் நிகழாவண்ணம் இருக்கவேண்டும் என்று அமெரிக்க அரசை அறிவுறித்தியது.தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசின் இந்த நடவடிக்கை உண்மையில் பாராட்டுக்குரியதே ..!!


இராமேஸ்வரம் மீனவன்:

இவரும் ஒரு இந்திய குடி மகன். செல்வந்தர் அல்ல, தினசரி சாப்பாட்டிற்காக கடலில் மீன் பிடிப்பவர்.


இவரும் இவரை சேர்ந்த சொந்தங்களும் கடலில் மீன் பிடிக்க செல்லும் போது தெரிந்தோ அல்லது தெரியாமலோ இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து விடுகிறார்கள். உடனே இவர் இலங்கை கடற் படையால் சுட்டுக்கொள்ளபடுகின்றார்.இறந்த உடலோடு கரை திரும்பும் இவரது சொந்தங்கள் அழுகிறார்கள், அவரது மனைவியும் குழந்தைகளும் பிணத்தின் மேல் விழுந்து துடிக்கிறார்கள். மீனவர் சமூகம் நீதி கேட்டு போராடுகிறது.


தனது நாட்டு மக்கள் மீது மிகுந்த அக்கரை உள்ள இந்திய அரசு, தனது குடி மகன் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டாலே கொதித்து எழும் இந்திய அரசு இராமேஸ்வரத்தில் நடப்பவை வேறு ஏதோ ஒரு நாட்டில் நடப்பது போல மவுனம் சாதிக்கிறது. நாடாளு மன்றத்தில் இந்த பிரச்சனையை MP -க்கள் பேசும் போது விளக்கம் அளித்த கிருஷ்ணா " மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து விட்டார்கள் , அதனால் இலங்கை கடற் படை சுட்டு விட்டது " என்று விளக்கம் அளிக்கின்றார். இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் இருந்து எந்த ஒரு கண்டனமும் விளக்கமும் கேட்கப் படவில்லை.


வேற்று நாட்டை சேர்ந்த ஒரு தீவிரவாதி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து மும்பை நகர மக்களை இஷ்டம் போல சுட்டுக் கொன்றான்,அப்படிப்பட்ட தீவிரவாதியையே உயிரோடு பிடித்து இன்னும் விசாரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் கடலில் அத்து மீறி எல்லைக்குள் நுழைந்து விட்டார்கள் அதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்று இந்திய அரசு இந்திய மீனவன் இறப்பிற்கு விளக்கம் அளிக்கிறது, இலங்கை அரசிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லை , இந்திய அரசு எந்த ஒரு விளக்கமும் கேட்டவில்லை.


வழக்கம் போல சினிமா, கிரிக்கெட் மற்றும் மலிவான அரசியல் செய்திகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக, இந்திய ஊடகங்கள் மீனவன் இறந்த செய்திக்கும் அதற்கான இந்திய அரசின் ஜீரோ நடவடிக்கைக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை.


இப்படி தனது குடிமகன்களில், ஒருவர் இரண்டு மணி நேரம் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு கொதித்து எழுந்தும் இன்னொருவர் சுடப்பட்டு இறந்த பின்னும் கண்டுகொள்ளாமல் இருப்பதும் என்ன நியாயம்? எப்படி இந்திய ஒருமைப் பாட்டின் மீதும் இறையாண்மையின் மீதும் நம்பிக்கை வரும்?
ஒருவேளை அந்நிய அரசால் சுட்டுக் கொல்லப்படும் நபர் பிரபலமான நடிகராகவோ அல்லது கிரிக்கெட் வீரராகவோ அல்லது வாய் சவடால் விடும் அரசியல் வாதியாகவோ இருந்தால் தான் இந்திய அரசு நடவடிக்கை எடுக்குமோ ?